சட்டமா அதிபராக மொஹான் பீரிஸ் வழங்கிய ஆலோசனைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாக மறுத்துள்ளார். ஆணைக்குழுவின் சார்பில், மூத்த சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வெலியமுன, ஜெசி அழகரட்ணம் ஆகியோர் முன்னிலை யாகவுள்ளனர்.
மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கீழ் இயங்கிய நிறுவனம் ஒன்றில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.
இந்த விசாரணைகளை நிறுத்துவதற்குரிய ஆலோசனைகளை அப்போதைய சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸ் வழங்கியிருந்தார். சாதாரண ஊழல் குற்றச்சாட்டுக்களை விட இது மிக மோசமான ஊழல் என்று குறிப்பிட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.இந்த வழக்கில் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரையும் மார்ச் 8ஆம் திகதி முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்று அழைப்பாணை விடுத்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையில், தமக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்தது தவறு என்று குறிப்பிட்டும், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியும், மொஹான் பீரிஸ், தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸ், சட்டத்தரணிகள் சங்கம் என்பன 5 வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த ஐந்து வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில், வழமையாக அரச திணைக்களங்கள் சார்பில் சட்டமா அதிபரே முன்னிலையாவார். ஆனால், மொஹான் பீரிஸ் சட்டமா அதிபராக இருந்தபோது நடைபெற்ற விடயம் தொடர்பிலா வழக்கு என்பதால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாக சட்டமா அதிபர் மறுத்துவிட்டார்.
இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில், அரச தலைவர் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வெலியமுன, ஜெசி அழகரட்ணம் ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.