கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார பதவியேறுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக கண்டியில் பதற்றமான நிலையில் அவருக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.
அவர் தன் கடமைகளைச் சரியாக செய்வார் என்று நாம் நம்புகிறோம். நான் நாளை கண்டிக்குச் செல்லவுள்ளேன். அதன்போது, அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று நிலைமைகளை பார்த்து மக்களை நேரடியாகச் சந்திக்கவுள்ளேன்.
எங்கள் ஆட்சியில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் சிறந்த நிர்வாகம் இருந்தது. வன்முறைகள் வெடிக்க இடம்கொடுக்கவில்லை. பிரச்சினைகளை அந்த இடத்திலேயே தீர்த்து வைத்தோம். ஆனால் இந்த அரசாங்கத்தில் சிறந்த நிர்வாகம் இல்லாமையினாலும், சம்பவத்தைப் பொறுப்பேற்க யாரும் இல்லைமையினாலும், இந்த பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு சென்றுள்ளது” என கூறினார்.

