தோட்ட தொழிலாளர்களால் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையகத்தின் பல பகுதிகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் பல பகுதிகளில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னாள் கூடிய தொழிலாளர்கள் தங்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென 2015ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை
சம்பள உயர்வினை கோரி கடந்த பல மாதகாலமாகவும் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

