Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனவிடுதலையின் ஓர்பகுதிதான் பெண் விடுதலை – அனந்தி சசிதரன் தெரிவிப்பு

March 8, 2020
in News, Politics, World
0
இனவிடுதலையின் ஓர்பகுதிதான் பெண் விடுதலை – அனந்தி சசிதரன் தெரிவிப்பு

சர்வதேச பெண்கள் தினமான இன்று தொன்மைவாய்ந்த வரலாற்று பெருமைகொண்ட தமிழினப்பெண்களின் நலிவு சுயநிர்ணயம் கண்ணியம் போராட்டம் என்பன தொடர்பாக ஈழத்தமிழ் பெண்களின் சார்பில் பேச வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உலகத் தனி தமிழர்கள் போருக்கு பின்னரான எங்கள் பெண்கள் நிலை தொடர்பாக பேசுவதுமட்டுமல்ல அதற்கான தீர்வுகளை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும் வேண்டும். என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சர்வதேச பெண்கள் தினத்தில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈழத்தமிழ் பெண்களாகிய நாம் ஒருபெருமை மிக்கதும் கடினமானதுமான காலங்களையும் கடந்து வந்திருக்கின்றோம். பெண்களுக்கென வகுக்கப்பட்டிருந்த நெறிமுறைச்சம் பிரதாயங்களுக்கு வெளியே வந்து சுயமாக எழுந்து நின்று எங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளோம்.

நாம் நடந்துவந்த பாதை விடுதலை வேட்கையால் புடம்போடப்பட்டதும் வீரத்தாலும், விவேகத்தாலும் வழிநடத்தப்பட்டதுமான புனிதமான பாதை. அவலங்களும், இரத்தமும், வியர்வையும், பேரிழப்புக்களும் எங்கள் பாதையை குறுக்கறுத்தபோதும் நம்பிக்கையுடன் துளிர்கொண்டு நம்பிக்கை ஒளியேற்றி வீறுகொண்டு முன்சென்றோம்.

அரசியல் பணியில் முன் நின்று போராட்ட பாதையை வலுப்படுத்தினோம் நிர்வாகிகளாக செயற்பட்டு ஒரு தனியரசான நிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தினோம். களமாடி சாதனைகள் படைத்து எதிரிகளை கதிகலங்க வைத்தோம்.

எமது பெண்கள் சுயமாக செயற்படும் அரசியலாளர்களாகவும் அறிவாளிகளாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் தோன்றினர். களங்களை வழிநடத்தும் வீரம்மிக்க தளபதிகள் உருவாகினர். எமது பெண்கள் களப்புலிகளாகப் பாய்ந்து நம்மை எதிர்த்த எதிரியை சின்னாபின்னப்படுத்தினர்.

ஓட்டுமொத்தத்தில் பெண்கள் ஒடுங்கிப்போய் இருந்த நிலையை மாற்றி ஆணுக்குப்பெண் சமம் என்ற தத்துவார்த்தத்தை உணர்த்தி அதற்கு உயிரூட்டி எல்லாமுறைகளிலும் எமது பெண்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தியது வரலாறு. இதை யாரும் மறுத்துவிடமுடியாது.

ஆனால் சிங்கள பேரினவாதம் முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட இனவழிப்பு யுத்தம் எமது மக்களின் வாழ்வையே தலைகீழாக மாற்றியது போன்று எமது பெண்களின் நிலையையும் நீண்டதூரம் பின்தள்ளிவிட்டது. இன்று எமது பெண்களின் சுயநிர்ணயம் மட்டுமல்ல கண்ணியமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.

எமதுபெண்களின் ஜனநாயக வழியிலான நியாயமான போராட்டங்கள் கூட பல்வேறு விதங்களில் முறியடிக்கும் வகையில் எமது பெண்களின் மீது கொடுரமான ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

எமது தமிழ் சமூகம் கொடுரமான மனிததன்மையற்ற இன ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எமது பெண்கள்மீது இன ஒடுக்குமுறைக்கு மேலதிகமாக பெண்ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் பெண்கள்மீது பெண்கள் என்ற வகையில் அரச பயங்கரவாதம் பல்வேறு ஒடுக்குமுறைகளை பிரயோகித்து வருகின்றது. இன்று பெண் ஒடுக்குமுறையின் ஆதாரங்களாக பாலியல் வல்லுறவுகள், வறுமை, தனிமைப்படுத்தப்படல் என்பன முன்வைக்கப்படுகின்றன.

இவற்றால் ஏற்படும் தாக்கங்கள் பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் அவர்களை மனித ஜீவன்களாக கணிக்காத ஒருபோக்கே நிலவுகிறது.

பெண்கள் மீது எத்தகையகொடுமைகள் இழைக்கப்பட்டாலும் அதற்கு நீதியை தேடமுடியாத நிலையே நிலவுகிறது பல சம்பவங்களில் பாதிக்கப்படுபவரே பல்வேறு வகையிலும் இழிவுபடுத்தப்படும் நிலையும் நிலவுகிறது.

தமிழ்ப்பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒருவடிவமாக இலங்கையின் ஆயுதப்படையினர் பெண்கள்மீதான பாலியல் வல்லுறவுகளையும் பாலியல் சித்திரவதைகளையும் பிரயோகித்து வருகின்றனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பல பெண் போராளிகள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டமையை நாம் அறிவோம்.

ஆனால் போர்முடிந்து பத்துவருடங்கள் ஆகியும் படையினரின் இந்தவெறி அடங்கிவிடவில்லை. இதில் குடும்பபெண்கள் கூட வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். போர் நாட்களின்போதும் சரி போர்முடிந்தபின்னும் சரி பெண்கள்மீதான இந்த வன்முறைகளில் ஈடுபட்ட எவரும் தண்டிக்கப்படவுமில்லை இவற்றை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.

இன்னும் வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் வலிந்துதிணிக்கப்பட்ட வறுமைகாரணமாக பெண்கள் வர்த்தகப்பண்டமாக மாற்றப்படும் அவலம் அரங்கேற்றப்படுகின்றது.

குறிப்பாக கிழக்கிலும் மலையகத்திலும் ஏராளமான பெண்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக அனுப்பப்படுகின்றனர். அவர்கள் தங்கள் வறுமைகாரணமாக அங்குசென்று பல்வேறுவிதமான கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

பலர் உயிரிழக்கும் நிலையும் கழுத்துவெட்டப்பட்டு கொல்லப்படும் நிலையும் கூட ஏற்படுகின்றது. அதாவது அரசாங்கத்திற்கு அந்நியச்செலாவணியை தேடிக்கொள்ளும் வர்த்தகப்பண்டங்களாக அவர்கள் மாற்றப்படுகின்றனர்.

அவர்களின் மனித உணர்வுகளை எவரும் பொருட்படுத்துவதும் இல்லை. இவ்வாறே தென்னிலங்கையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றச்செல்லும் இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களின் வறுமை தரகர்களின் ஏமாற்று என்பன அவர்களை இந்த அவலநிலைக்கு தள்ளிவிடுகின்றது.

போரின்போது பல்லாயிரக்கணக்கான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கை 89000 இற்கும் அதிகம் என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. நமது மக்களின் குடிசனத்தொகையுடன் ஒப்பிடும்போது இதனை ஒரு சாதாரண தொகையாக கருதிவிடமுடியாது.

இப்பபெண்கள் பொருளாதார அடிப்படையிலும் மற்றும் உள உடல் தாக்கங்களாலும் பெரும் தாக்கங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர்.

கணவன் இல்லாத நிலையில் குடும்பசுமையை தாங்கும் பொறுப்பு அந்த பெண்ணின் தலையிலேயே ஏற்றப்படுகிறது. அவள் தனது பிள்ளைகள் முதியோர் ஆகியோரது ஒவ்வொரு தேவைகளையும் நிறைவு செய்ய வேண்டிய நிலைக்குதள்ளப்படுகிறாள். வறுமையுடன் இவள் தனியாகவே போராடவேண்டியுள்ளது.

இந்தநிலையில் அவள் தனது சக்திக்குமேல் உழைக்க வேண்டியநிலைக்கு தள்ளப்படுகிறாள். குடும்பமாக கணவன் பிள்ளைகள் ஆகியோருடன் இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாக வாழவேண்டிய ஒருபெண் கணவன் இல்லாத நிலையில் அவளின் தனிமை பாதுகாப்பற்ற நிலை.

அதேவேளை தன் துன்பதுயரங்களை பகிர்ந்துகொண்டு ஆறுதல் அடையக்கூடமுடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவள் மன அழுத்தங்களுக்கு உட்படும் நிலை ஏற்படுகிறது.

இது அவளைவிரக்தி வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படுத்தி தன்னைதானே வெறுக்கும் நிலையை தோற்றுவிக்கிறது. கிட்டத்தட்ட தன் குடும்பத்தை காக்கும் ஒரு இயந்திரமாகவே அவள் மாறிவிடுகிறாள்.

போர் இடம்பெற்ற காலத்தில் கண்ணியத்துடனும், சுயநிர்ணய உரிமையுடனும் முன்னின்று செயற்பட்ட பெண்கள் இன்று வறுமை, பாலியல் வல்லுறவுகள் தொடர்பான அச்சுறுத்தல்கள் குடும்பவாழ்வின்மை போன்ற இன்னல்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கள் சுயநிர்ணயத்தை பாதுகாத்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு இன்னமும் போராடவேண்டியுள்ளது. அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் தனது உள உடல் வேட்கைகளுக்கு எதிராகவும் கடுமையான முறையில் போராட நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை எமது பெண்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எவ்வளவு பாரதூரமானது என்பதை பலர் உணர்ந்துகொள்ளவில்லை.

காணாமல் போனோரின் ஒவ்வொருதாய்மாரும் ஒவ்வொரு மனைவிமாரும் படும் வாழ்வியல் துன்பங்கள் ஒருபுறமும் மனரீதியான தவிப்புக்கள் இன்னொருபுறமுமாய் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

பிள்ளை உயிருடன் உள்ளதா இல்லையா என்ற தாய்மை உணர்வின் தவிப்பை வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது. தான் பாலூட்டி சோறூட்டிவளர்த்தபிள்ளையின் நிலையை அறியமுடியாததவிப்பை அவளால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.

திருமணமான பெண்களைப்பொறுத்தவரையில் குங்குமபொட்டும் தாலியும் அவளின் பண்பாட்டு அடையாளங்கள் எனவே காணாமல் போனோரின் மனைவிகள் கணவனை பிரிந்தநிலை ஒருபுறமிருக்க தாலியை கழற்றுவதா என்ற தடுமாற்றம் ஒருபுறமும் தடுமாறிநிற்கின்றனர். எனவே காணாமல்போனோர் தொடர்பான பண்பாட்டுத்தாக்கங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எம்மில் பலர் எங்கள் பெண்களின் இந்த அவலநிலயை புரிந்துகொள்வதில்லை பெண்கள் தொடர்பான தவறுகள் ஏதாவது இடம்பெற்றால் பெண்களையே குற்றம்சொல்லும் அவலமான நிலையிலிருந்து எமது சமூகம் முழுமையாக விடுபட்டுவிட்டது எனச்சொல்லிவிடமுடியாது.

பெண்கள் எமது சமூகத்தின் பாதித்தொகையினர் என்பதையும் அவர்களின் பங்களிப்பிற்கு எதுவுமே முன்செல்லமுடியாதுஎன்னதனையும் எமதுசமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே எமது பெண்கள் வர்த்தகப்பண்டமாக பார்க்கப்படுவதையும் அடிமைகள்போல் நடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த எமது சமூகம் முனைப்புடன் செயற்படவேண்டும்.

விடுதலைப்போர்க்காலத்தில் எமது பெண்களின் சக்தியை எமது சமூகம்மட்டுமல்லாது உலகமே அறிந்திருந்தது. எமது பெண்கள் சக்தியின் உருவமாக எழுச்சிபெற்று நின்றனர். இதை உணர்ந்துகொண்ட இலங்கையின் ஆட்சியாளர்கள எமது பெண்களின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

எனினும்கூட எமது பெண்கள் தமக்குஎதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தளர்ந்துவிடவில்லை.

அடக்குமுறைகளுக்கும் அடங்கிவிடவில்லை. எமது கண்ணியத்தையும் சுயநிர்ணயத்தையும் காப்பதில் விடாப்பிடியான உறுதியுடன் செயற்பட்டுவருகின்றோம்.

எமது இறைமையை நிலைநிறுத்தவும் எமது முன்னகர்வுக்கு தடையாக நிற்கும் வறுமையை விரட்டவும் எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை முறியடிக்கவும் எமது புலம்பெயர் உறவுகளின் ஆதரவைக்கோருகின்றோம்.

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எமதுபோராட்டமே எமது கண்ணியத்தை பாதுகாக்குமெனவும் எமது சுயநிர்ணயத்தை பெற்றுத்தரும் என்பதையும் நாம் திடமாக நம்புகிறோம்.

இந்தகடுமையான நீண்டபணியில் நாம் மேலும் எத்தனையோ பிரச்சனைகளையும் இழப்புக்களையும் சந்திக்கவேண்டிவரும் என்பதையும் அறிவாம். அதேவேளை எமது இனவிடுதலையின் ஓர்பகுதிதான் பெண் விடுதலை என்பதையும் புரிந்துகொண்டுள்ளோம்.

எனவே புலம்பெயர் உறவுகள் தரும் ஆதரவு நாம் மேலும் மேலும் முன்செல்லும் வலிமையை எமக்க வழங்கும் என நம்புகிறோம். நீங்கள் உரத்துக்கொடுக்கும் குரல் எமது நியாயங்களை உலகிற்கு எடுத்தியம்பும் நீங்கள் எமக்கு வழங்கிய உதவிகள் எம்மை மேலும் வலிமைபெறசசெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கோடீஸ்வரர் யூசுப்அலியின் இலங்கை பயணம் – கொரோனா அச்சத்தினால் ரத்து

Next Post

வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

Next Post
வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures