2015ஆம் ஆண்டு அரசுக்கு மக்கள் ஆணை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்கு மாறான –- எதிரான திசையில் அரசு பயணிக்கக்கூடாது. இனவாதிகள் குழப்புவார்கள் என்று பயந்து அவர்களுக்கு இணைவாகச் செயற்படக்கூடாது.
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ள◌ார் ஐ.நா. உதவிச் செயவலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் தான் மேற்கண்டவாறு வலியுறுத்தினார் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் அரசமைப்பு உருவாக்க முயற்சி, ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட விடயங்களிலிருந்து அரசு பின்வாங்குகின்றது என்றும், இந்த விடயங்களை அரசு முன்னெடுக்க பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காலையில் (நேற்று) சந்தித்தார் எனவும் இதன்போது, மக்கள் ஆணை ஒன்று அரசுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து விலகக் கூடாது. அதற்கு மாறான திசையில் பயணிக்கக்கூடாது. உருவாக்கிய மாற்றத்திலிருந்து நழுவிப் போய்விடக் கூடாது என்று கூறினார் எனவும், கூட்டமைப்புடனான சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.