இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை சந்தேகமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது பௌத்தத்தின் மைய கேந்திரமாகும் எனவும் காணி மற்றும் காணி அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள சர்ச்சையான அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன மற்றும் சமூகங்களுக்கிடையிலான பதற்ற நிலையை ஏற்படுத்த விக்னேஸ்வரன் முயற்சி செய்கிறார். மதங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்குவதற்கு பதிலாக யதார்த்தத்தை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

