கொசோவோ தனிநாடாக மாறியமை போன்று தமிழர் பிரதேசமாகிய வடக்கு – கிழக்கு பிராந்தியமும் தனிநாடாக உருவாக்கப்படவேண்டும். இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்கள் போதியளவு உள்ளன.. ஐ.நாவில் இனப்படுகொலைத் தீர்மானத்துடன், அதனைக் காரணம் காட்டி இடைக்கால அரசு உருவாக்கப்படவேண்டும்.
– இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்.
அண்மையில் அவர் அரசியல் தொடர்பாக வழங்கிய ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் ‘மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
யூகோசிலாவிய சமஷ்டிக் குடியரசுடன் சுயாட்சியை வேண்டி உள்நாட்டில் மிகக் கொடிய யுத்தம் நடைபெற்றது பெருமளவு உயிர்கள் பலிகொள்ளப்பட்டன இவ்வாறான கொடிய யுத்தம் ஐ நா வின் பொதுச்சபை.பாதுகாப்புச்சபை .வட அத்திலாந்திக் உடன்படிக்கை அமைப்பு மனித உரிமைகள் பேரவை என்பன தலையிட்டு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தன இத் தீர்மானம் 1244 (1999 ஆண்டு) ஆகும் இதன் மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக கொசோவோ விற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறை உருவாக்க அதிகாரமளிக்கப்பட்டது.இதில் பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டன.
1) யூகோசிலாவிய குடியரசின் எல்லைக்கு உட்பட்ட கணிசமான சுயாட்சியை கொசோவாப் பிராந்தியத்திற்கு கொடுத்தல்
2) சனநாயக நிறுவனங்களை உருவாக்குதல்
3)கொசோவா பிராந்திய மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள உருவாக்குதல்
இவ்வாறு ஐ நா பாதுகாப்புச் சபை கொசோவோவின் அரசியல் எதிர்காலம் பற்றிய இடைக்கால நிருவாகத்தை வழங்கியது. ஐ நா தீர்மானத்தின் மூலம் கொசோவோவில் இருந்த யூகோசிலாவிய படைகள் பொலிஸ் வாபஸ் பெறப்பட்டு வரையறுக்கப்பட்ட அதிகாரிகள் கடமை புரிய அனுமதிக்கப்பட்டனர்.அத்துடன் பின்வரும் அதிகாரங்கள் கொசோவோவிற்கு வழங்கப்பட்டன
1)இடைக்கால நிர்வாகம்
2) சட்டங்கள் உருவாக்கல்
3)நீதித்துறை ஆலோசனைச்சபை
4)பிராந்திய பொலிஸ் பிரிவு
5)பிராந்திய மாநகர நிர்வாகம்
6)மத்திய நிதி அதிகாரசபை
7)அரச சொத்து
இவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டு கொசோவோ பிராந்தியம் ஐ நா செயலாளரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது இதன் போது பல எதிர்ப்புகள் யூகோசிலாவியா முன் வைத்தாலும் சர்வதேச சட்டம் அனுமதிக்கிறது என சர்வதேச சட்ட வல்லுனர்கள் நிருபித்தனர்
இதன் மூலம் கொசோவோ மக்கள் அனுபவித்த இடர்பாடுகள் முடிவுக்கு வந்தது. அத்துடன் சுயாட்சி அரசு உருவாகியது ஆரம்பத்தில் பல நாடுகள் தலையிட்டு தடுக்க முயன்ற போது பயனளிக்கவில்லை. பின்னர் ஐ நா பொதுச்சபை பாதுகாப்புச்சபை மூலம் இடைக்கால நிருவாகம் தீர்மானத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. இடைக்கால நிருவாகம் நடைபெறும் போது பாராளுமன்றம் ஒருதலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் ஒன்றை மேற்கொண்டது இதன் ஊடாக கொசோவோ தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்டது [17/02/2008 தன்னிச்சையாக விடுதலைப் பிரகடனம் செய்யப்பட்டது] இதனை ஐ நா பொதுச்சபை சர்வதேச நீதி மன்றத்திடம் அபிப்பிராயம் கோரிய போது நீதி மன்றம் அதனை சட்டவலிமை உடையது என தீர்ப்பளித்தமையால் கொசோவோ தனி நாடாக மாறியது.
இந்த கொசோவோவை ஒத்த கோரிக்கை நியாயங்களை உடைய போராட்டத்தை நடாத்தியவர்கள் தான் ஈழத் தமிழர்கள். யுத்தம் முடிவுக்கு வந்தாலும் உயிர்ப் படுகொலை என்பது சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளன அதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன இதனை சிறந்த பொறிமுறை மூலம் ஐ நா பொதுச்சபை பாதுகாப்புச்சபை மனித உரிமைப் பேரவை போன்றவற்றின் கவனத்திற்கு உட்படுத்தினால் ஈழத் தமிழர்களுக்கும் இடைக்கால நிருவாகம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு இனப்படுகொலைக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது போல இடைக்கால நிருவாகத்திற்கான தீர்மானத்தையும் பெற முடியும். – என்றுள்ளது.

