இந்திரா – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஜெ எஸ் எம் மூவி புரொடக்ஷன் – எம்பரர் என்டர்டெயின்மென்ட்
நடிகர்கள் : வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பிர்ஸாதா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : சபரீஷ் நந்தா
மதிப்பீடு : 2/5
தமிழகத்தில் பிரபலமான உணவகம் நடத்தும் தொழிலதிபரான வசந்த் ரவி நடிப்பின் மீது கொண்ட மோகம் காரணமாக ‘தரமணி ‘எனும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து ‘ராக்கி’, ‘ஜெயிலர்’ ஆகிய படங்களில் நடித்து தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அவர் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘இந்திரா’. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
காவல்துறையில் பணியாற்றும் அதிகாரியான இந்திரகுமார்( வசந்த் ரவி) பணியின் போது மது அருந்தி விபத்தினை ஏற்படுத்தியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். பணியிடை நீக்கத்தை அகற்றிவிட்டு மீண்டும் பணியில் சேருவதற்காக தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளை சந்திக்கிறார்.
இந்த தருணத்தில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதால்.. அதனை தாங்கிக் கொள்வதற்காக அதீதமாக மது அருந்துகிறார். இதன் காரணமாகவே அவருடைய காதல் மனைவியான கயலுக்கும்( மெஹ்ரீன் பிர்ஸாதா) , இவருக்கும் இடையே கருத்து முரண் ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கண் பார்வை திறன் பாதிக்கப்படுகிறது. பார்வைத் திறனை முழுவதுமாக இழக்கிறார்.
கணவனின் இந்த நிலையால் நிலைகுலைந்து போன மனைவி கயல், அவருக்கு ஆதரவாக இருக்க தீர்மானிக்கிறார். அவருக்கு ஆறுதலும் தருகிறார். இந்நிலையில் சென்னை மாநகரில் தொடர் கொலைகள் மர்மமான முறையில் அரங்கேறுகிறது.
தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளி யார்? என்பதை கண்டறிவதற்கான விசாரணையை காவல்துறை தொடங்கி, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக சைக்கோ கொலையாளி கொலை செய்யும் பாணியில் இந்திரகுமாரின் மனைவியான கயலும் கொலை செய்யப்படுகிறார்.
பார்வைத் திறனற்ற இந்திரகுமார் தன் மனைவியை சைக்கோ கொலையாளி தான் கொன்றிருக்கிறார் என கருதி, அவரை தீவிரமாகவும், தனித்துவமாகவும் தேட தொடங்குகிறார். இதற்கு அவருடன் காவல்துறையில் பணியாற்றிய நண்பரும் உதவுகிறார்.
இந்த தருணத்தில் சில பல சோதனைகளுக்குப் பிறகு சைக்கோ கொலையாளி கண்டறியப்பட்டு, கைது செய்யப்படுகிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்திரகுமாரின் மனைவியான கயலை கொன்றது நான் இல்லை.
அத்துடன் நான் இதுவரை 25க்கும் மேற்பட்டவர்களை கொன்றிருக்கிறேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க காவல்துறையை போல் கதையின் நாயகனான இந்திரக்குமாரும் குழம்புகிறார்.
அப்படியானால் தன் காதல் மனைவியை கொன்றது யார் ? என்ற தேடலை தொடர்கிறார் இந்திரகுமார் . அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
சஸ்பென்ஸ் வித் கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைக்கதையில் ரசிகர்களை யோசிக்க விடாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி செல்வது ஒரு வகையினதான உத்தி. ஆனால் இதில் லாஜிக்காக நிறைய வினாக்களை பார்வையாளர்களிடம் எழுப்பி… அதற்கான பதிலை திரையில் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் விவரிப்பது தான் புத்திசாலித்தனமான படைப்பாளிகளின் பணி.
ஆனால் இங்கு தான் இயக்குநர் தன்னிடம் உள்ள போதாமையை பதிவு செய்கிறார். அதாவது முதல் பாதியை ஒருவகையான திரைக்கதையிலும் இரண்டாவது பாதியை வேறு வகையான தளத்திலும் விவரித்து இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதை விட சோர்வைத்தான் உண்டாக்குகிறது.
கதையின் நாயகனான இந்திரா எனும் இந்திரகுமார் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் வசந்த் ரவி- பார்வை திறன் அற்றவராக தோன்றும் காட்சிகளில் மிகை நடிப்பாக இருந்தாலும் அதனை தன்னுடைய உடல் மொழியில் இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
தொடர் மர்ம கொலைகளை செய்யும் குற்றவாளியாக நடித்திருக்கும் சுனில் சில இடங்களில் தன் அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.
கதையின் நாயகி கயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மெஹ்ரின் பிர்ஸாதாவை விட, மதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிகா சுரேந்திரனின் அழகும், இளமையும் ரசிகர்களை கவர்கிறது.
முதல் பாதி- இரண்டாம் பாதி என வெவ்வேறு தளங்களில் திரைக்கதை பயணித்தாலும் ரசிகர்களுக்கு ஓரளவு இருக்கையில் அமர்வதற்கான உத்தரவாதத்தை வழங்குவது ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர் – மற்றும் படத்தொகுப்பாளர் ஆகிய மூவர் கூட்டணி தான்.
இருப்பினும் ஒலிக்கலவை பொறியாளரின் கவனக்குறைவினால் பல இடங்களில் உரையாடல்கள் ரசிகர்களின் காதுகளை சென்றடைய மறுக்கிறது.
கதையின் நாயகி கொலை நடந்த தருணம்.. இடம்…பாணி… கதைக்கான மையப்புள்ளி என்றாலும்.. அதற்காக இயக்குநர் சொல்லி இருக்கும் ஃப்ளாஷ் பேக் பொருத்தமானதாகவோ வலுவானதாகவோ இல்லை. அதேபோல் சைக்கோ கொலையாளியின் முடிவு என்ன ? என்பதும் விவரிக்கப்படவில்லை. இதுவும் படைப்பாளியின் குறையே.
இந்திரா – கோமா நோயாளிகளுக்கான செயற்கை சுவாசம்.