தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி என எட்டு இந்திய திரையுலகில் கோலோச்சும் நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து விளையாடும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், எட்டு அணிகள் விளையாடும் போட்டிகளின் அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொழுது போக்கு சினிமாவும், கிரிக்கெட்டும் தான். அண்மைக்காலமாக ஐபிஎல் டி20 போட்டிகள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் பிரசித்தமாகியிருக்கிறது. அந்தப் பாணியில் தற்போது சினிமாவிலும் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எனும் கிரிக்கெட் போட்டியில் ஒன்றிணைந்து விளையாடுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர்களின் நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடுவது பெரும் கொண்டாட்டமாகும்.
பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், பஞ்சாப் டி சேர், போஜ்புரி தபாங்ஸ் என எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கு பற்றுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் ராய்ப்பூர், பெங்களூரூ, ஜோத்பூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மாநகரங்களில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் மார்ச் 19 ஆம் திகதியன்று நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி மதியம் இரண்டு முப்பது மணி அளவில் தொடங்கும் போட்டிகள் இரவு 11 மணி வரை நடைபெறும். இதில் சென்னை ரைனோஸ் அணியின் கப்டனாக நடிகர் ஆர்யா விளையாடுகிறார். இவருடன் நடிகர்கள் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், ப்ருத்வி பாண்டியராஜன், விக்ராந்த், சாந்தனு பாக்யராஜ், ஆதவ் கண்ணதாசன், என் ஜே சத்யா, பால சரவணன் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருக்கிறார்கள். சென்னை ரைனோஸ் விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஜீ திரை எனும் தொலைக்காட்சியிலும், அனைத்து போட்டிகளும் ஜீ அன்மோல் சினிமா எனும் தொலைக்காட்சியிலும் நேரலையாக ஒளிபரப்பாகும்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கோப்பையை வெல்வது குறித்து சென்னை ரைனோஸ் அணியின் நட்சத்திர வீரரான ஜீவா பேசுகையில், ” எங்கள் அணியில் திறமையான நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எதிரணியில் விளையாடும் புதிய நட்சத்திர வீரர்களின் திறன்களையும், சாதக பாதக அம்சங்களையும் அவதானித்து, விளையாட வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் அனைத்து போட்டிகளும் கடினமாக இருக்கும். இருப்பினும் நம்பிக்கையுடன் விளையாடி கோப்பையை கைப்பற்ற முயற்சி செய்வோம்” என்றார்.
எட்டு அணிகளுக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தூதுவராகவும், நடிகைகள் ஆதரவாளராகவும் போட்டி நடைபெறும் இடங்களில் தோன்றி ரசிகர்களையும், விளையாடும் நட்சத்திர வீரர்களையும் உற்சாகப்படுத்துவர் என்பதாலும், நட்சத்திரங்கள் பங்குபற்றும் இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சுவராசியமானதாகவே இருக்கும் என அவதானிக்கப்படுகிறது.