மதுரை நாய்ஸ் மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு மையத்தில் ஆங்கில கேள்வித்தாளுக்கு பதிலாக இந்தி கேள்வித்தாளை கொடுத்து, மாணவர்களை நோகடித்த தேர்வுத்துறையினரின் செயலால், 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மீண்டும் மதியம் 3 மணியிலிருந்து தேர்வு எழுதும் கொடுமை நடைபெற்று வருகிறது.
மதுரை நரிமேட்டிலுள்ள நாய்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 8 மாணவர்கள் வரவில்லை. மீதியுள்ளவர்கள் தேர்வு எழுதினர். அதில், 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆங்கில கேள்வித்தாளுக்கு பதிலாக இந்தி கேள்வித்தாளை கொடுத்துள்ளார்கள். ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கெடுபிடியால் பதற்றத்தில் இருந்த மாணவர்கள் இதைப்பற்றி தேர்வுக்கூட மேற்பார்வையாளர்களிடம் சொல்லவே முதலில் பயந்துள்ளார்கள். அதன் பின்பு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதும், அவர்களும் திரு திருவென்று விழித்திருக்கிறார்கள். இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடாமல் பாதுகாத்தவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதுவரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
மதியம் தேர்வு எழுதிவிட்டு மற்ற மாணவர்கள் வந்த பின்புதான் இந்த தகவல் வெளியில் தெரிந்தது. ஏதோ குளறுபடி நடந்துவிட்டது என்று கூறிய தேர்வுத்துறையினர், மதியம் 3 மணி முதல் அவர்களுக்கு ஆங்கில கேள்வித்தாள்களை வழங்கி தேர்வு எழுத அனுமதித்துள்ளார்கள். அவர்கள் மதிய உணவு எடுத்துக் கொள்ளாமல், பதற்றத்துடன் தற்போது தேர்வு எழுதி வருகிறார்கள். இதனால் பெற்றோர்கள் கடும் கோபத்திலும் ஆற்றாமையிலும் இருக்கிறார்கள். மாணவர்களை சரியாக வரச்சொன்ன சி.பி.எஸ்.சி. தேர்வுத்துறை, சரியான கேள்வித்தாளை வழங்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக கொதிக்கிறார்கள் மாணவர்களின் பெற்றோர்.