இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான தோல்வியைத் தவிர்க்கும் வகையில் திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆறுதல் வெற்றிக்கு குறிவைத்து இலங்கை களம் இறங்கவுள்ளது.
கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது போட்டியில் 67 ஓட்டங்களாலும் இரண்டு அணிகளும் துடுப்பாட்டத்தில் சிரமத்தை எதிர்கொண்ட 2ஆவது போட்டியில் 4 விக்கெட்களாலும் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.
இந் நிலையில் ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இன்றைய கடைசிப் போட்டிக்கான இலங்கை அணியில் 2 மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனஞ்சய டி சில்வாவுக்குப் பதிலாக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் அஷேன் பண்டாரவும் சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்குப் பதிலாக ஜெவ்றி வெண்டசேயும் இறுதி அணியில் இணைக்கப்படுவார்கள் என அறியக் கிடைக்கிறது.
உபாதை காரணமாக 2ஆவது போட்டியில் வினையாடாமல் இருந்த பெத்தும் நிஸ்ஸன்க இன்றைய போட்டியில் மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது.
அவருக்கு பதிலாக 2ஆவது போட்டியில் அறிமுகமாகி அரைச் சதம் பெற்ற நுவனித பெர்னாண்டோவை தொடர்ந்து களம் இறக்குவதற்கு இலங்கை அணி முகாமைத்துவம் விரும்பும் என்பதால் யாரை நிறுத்துவது என்ற சிக்கல் அவர்களுக்கு உருவாகும்.
அப்படியானால் சரித் அசலன்க நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இது இவ்வாறிருக்க, கடந்த இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறிய இலங்கை பந்துவீச்சாளர்கள் இன்றைய போட்டியில் திறமையாக பந்துவீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது மற்றொரு தோல்வியை இலங்கை சந்திக்க நேரிடும்.
இந்த வருடம் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள இந்தியா, ஓரிரு மாற்றங்களுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.
நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதால் அணியை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன் இருபது 20 கிரிக்கெட் அரங்கில் அசத்திவரும் துடுப்பாட்ட வீரர் சூரியகுமார் யாதவும் ஆரம்ப வீரர் இஷான் கிஷானும் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் (பெரும்பாலும்)
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், நுவனிது பெர்னாண்டோ அல்லது சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டார, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, கசுன் ராஜித்த, லஹிரு குமார, ஜெவ்றி வெண்டர்சே.
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது சூரியகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, உம்ரன் மாலிக், மொஹமத் ஷிராஜ்.