பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பாக்., ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்கள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 8 இடங்களில் முகாமிட்டுள்ளனர். சுமார் 250 பயங்கரவாதிகள் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 27 நிலைகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உயர்மட்ட புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் எளிதில் வந்து சென்ற 2 நிலைகள், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்டன. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் போது அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் தற்போது மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதாகவும் புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. 2016 ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது 160 ஆக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, அதற்கு பிறகு 190 முதல் 230 ஆக அதிகரித்துள்ளது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் வரை கூடுதலாக 8 பயங்கரவாத முகாம்கள் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
லக்ஷர் இதொய்பா 6 இடங்களிலும், ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் முகாமிட்டுள்ளனர். இந்திய எல்லைக்குள் நுழைவதற்காக வனப்பகுதிகள் உள்ளிட்ட எல்லையை ஓட்டிய பகுதிகளில் அவர்கள் கள ஆய்வு நடத்தி வருவதாகவும் புலனாய்வுத்துறை தகவல் தெரிவிக்கிறது

