மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை , கூராய் , சீதுவிநாயகபுரம் ஆகிய கிராமத்தை மேம்படுத்தி இந்தியாவில் அகதி வாழ்வு வாழும் எமது உறவுகளும் தாயகம் திரும்ப வழி ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஏ32 சாலையில் இலுப்பையடிச் சந்தியின் கிழக்குத் திசையில் 5 கிலோ மீற்றர் தொலைவில் ஆத்திமோட்டையும் , 8 கிலோ மீற்றர் தொலைவில் கூராய் கிராமம் உள்ளதோடு , 13 கிலோ மீற்றர் தொலைவில் சீது விநாயகபுரம் கிராமம் உள்ளது.
இவை அதிக விவசாய கிராமங்களும் பெரும் எண்ணிக்கையான கால் நடை வளர்ப்பிலும் ஈடுபட்ட இப்பகுதிகளில் பல சைவ ஆலயங்கள் , கத்தோலிக்க ஆலயங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டு இரு பாடசாலைகளின் கட்டிடங்களும் உண்டு. இதனைவிட நூற்றிற்கும் மேற்பட்ட கல் வீடுகள் இருந்த அடையாளம் மட்டுமே உள்ளபோதும் இன்று வீடுகளும் இல்லை. அதில் குடியிருந்தவர்களும் இல்லை. என்ற நிலமையே கானப்படுகின்றது.
இதேபோல் ஆத்திமோட்டையில் இருந்த பாடசாலையில் நூற்றுற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்ற நிலையில் இன்று அப்பாடசாலையில் வெறும் 13 மாணவர்கள் மட்டுமே உள்ளமையினால் குறித்த பாடசாலை கள்ளியடியில் உள்ள பாடசாலையுடன் இணைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கூராயில் இயங்கிய பாடசாலை தற்போதும் இயங்கும் நிலையில் அங்கும் போதிய மாணவர்கள் கிடையாது. 80குடும்பங்கள் வாழ்ந்த ஆத்திமோட்டையில் இன்று 10 குடும்பங்களும் , 120 குடும்பங்கள் வாழ்ந்த சீதுவிநாயகர்புரத்தில் 30 குடும்பங்களுமே வாழ்கின்றனர்.
அதேபோன்று கூராயில் 200 குடும்பங்கள் வாழ்ந்த நிலையில் தற்போது 100 குடும்பம்வரையில் வாழ்கின்றனர். இதேநேரம் இக் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த அதிக மக்கள் இந்தியாவில் உள்ள நலன்புரி முகாம்களிலேயே வாழ்கின்றனர்.
இதேநேரம் இக்கிராமங்களிற்குச் செல்லும் 13 கிலோ மீற்றர் தூர வீதியும் தற்போதுவரையில் மணல் வீதியாகவே காட்சியளிப்பதோடு குண்றும் குழியுமாகவே காட்சி தருகின்றது. அவ்வாறு காட்சி தரும் வீதியின் இருமருங்கும் உள்ள பற்றைகள் வீதியை ஆக்கிரமிப்புச் செய்கின்றன.
இதனால் மோட்டார் சைக்கிள் மட்டுமே செல்லும் ஒற்றையடிப்பாதைபோன்றே காட்சி தருகின்றன. இங்கே மாலை 6 மணிக்கு பின்பு வீதிகளில் யாணைகள் பாதையோரம் நிற்கும் அவலத்தின் காரணமாகவே 5 மணியுடன் அப்பகுதிகள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட கிராமங்கள்போன்று அடங்கிவிடும்.
அதன் பின்பு அப்பாதையால் ஒரு வாகனம் போவதாக இருந்தால் அது கூராயில் உள்ள படைமுகாம் வாகனமாகத்தான் இருக்க முடியும். இந்த நிலையில் எஞ்சியவர்கள் உயிர்வாழவும் இருப்பிடத்தினை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த இடம் திரும்பவும் இவ் வீதியினை புனரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கும் இப்பகுதி மக்கள்.
இப்பாதையானது. இங்கு வாழும் சொற்ப குடும்பங்களிற்காக 13 கிலோமீற்றர் பாதையை செப்பணிட அதிக பணம் செலவு செய்யமுடியாது என கூறுகின்றனர். உண்மையில் இப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டால் பல பாரிய நண்மைகளை ஈட்டமுடியும்.
அதாவது இந்தப் பகுதியில் 15 கிலோ மீற்றர் வீதி சீரான வகையில் புனரமைப்புச் செய்யப்பட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாண்டியன்குளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சிராட்டிகுளம் வரையிலான பாதையினையும் செப்பனிடும் பட்சத்தில் முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களிற்கிடையிலான சுமார் 50 கிலோ மீற்றர் பயணம் மீதப்படுத்தப்படும்.
இப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் பணிபுரிய ஆசிரியர்கள் முன்வருவார்கள் அதன் பின்பு மக்களும் சொந்த இடம்திரும்புவார்கள்.
இவ்வாறு குறிப்பிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவில் தங்கியுள்ள எமது உறவுகளும் தாயகம் திரும்ப முனவருவார்கள் தற்போது இந்தியாவில் தங்கியுள்ள தாயக மக்களில் அதிகமானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர்.
அதிலும் குறிப்பாக மன்னார் மாவட்டந்தின் கிராம்ப்புற மக்களே போர் காலத்தில் அச்சம் காரணமாக வெளியேறினர். எனவே குறித்த வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்த முன்வருவதன் மூலம் எமது கிராமத்தினதும் மாவட்டத்தினதும் இருப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் .
ஏனெனில் இந்திய முகாம்களில் வாடும் உறவுகள் எம்முடன் உரையாடும்போது சொந்த ஊருக்கு திரும்பி வாருங்கள் என நாம் அழைத்தால் அவர்கள் கோருகின்றனர். தற்போது நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் இல்லையா ?
தாயகத்தில் வாழும் உங்களிற்கு பாதுகாப்பு , வீட்டு வசதி , சீரான போக்குவரத்து , பிள்ளைகளிற்கான கல்வி வாய்ப்பு , தொழில்துறை எவ்வாறு உள்ளது. தாயகத்தில் உள்ளவர்களே சிரமத்தை எதிர்நோக்கும்போது எதனை நம்பி இந்தியாவில் உள்ளவர்களும் திரும்புவது எனக் கோருகின்றனர்.
எனவே தற்போது இங்கே வாழும் 150 குடும்பங்களிற்காக மட்டும் அன்றி எமது கிராமத்தினை சேர்ந்த இந்தியாவில் வசிக்கும் சுமார் 400 குடும்பத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.