ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை 5–0 என முழுமையாக கைப்பற்றலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி தொடரை 4–0 என கைப்பற்றி விட்டது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று கொழும்புவில் நடக்கவுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை குறைசொல்ல முடியாத அளவில் திகழ்கிறது. இத்தொடரில் இரண்டு சதம் விளாசி உள்ள ரோகித் அபார ‘பார்மில்’ உள்ளார். கடந்த முறை 131 ரன்கள் குவித்த கோஹ்லி நாயகனாக ஜொலித்தார்.
சொதப்பும் ராகுல்: அடுத்த உலக கோப்பைக்கான (2019) சோதனை முயற்சியாக லோகேஷ் ராகுலை ‘மிடில்–ஆர்டரில்’ களமிறக்கினர். இவர் மூன்று போட்டிகளிலும் (4, 17, 7) சொதப்பினார். இத்தொடரில் ரகானே மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். இன்று தவான் இல்லை என்பதால், இவர் துவக்க வீரராக களமிறக்கப்படலாம். நெருக்கடியில் கைகொடுக்க தோனி காத்திருக்கிறார். கடந்த போட்டியில் அரை சதம் கடந்த மணிஷ் பாண்டேவும் நம்பிக்கை சேர்க்கிறார்.
பிரகாசிக்கும் பும்ரா: வேகப்பந்துவீச்சில் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது நிச்சயம். இவருடன் பும்ராவின் ‘யார்க்கரும்’ சேரும் பட்சத்தில், எதிரணியை அச்சுறுத்தலாம். பாண்ட்யாவின் சுமையை குறைக்க எண்ணினால், கேதர் யாதவ் இடம்பெறலாம். ‘சுழலில்’ குல்தீப், அக்சர் படேல் அசத்தினால் தொடரை முழுவதுமாக கைப்பற்ற முடியும்.
இலங்கை அணி சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடர்ந்து 7 தோல்விகளை (3 டெஸ்ட், 4 ஒரு நாள்) சந்தித்துவிட்டது. இத்தொடரில், இரண்டு போட்டியில் வெல்ல வேண்டிய இலக்கையும் கோட்டைவிட்டது. இதனால், உலக கோப்பைக்கு நேரடியாக முன்னேறும் வாய்ப்பிற்கு, வெஸ்ட் இண்டீஸ் செயல்பாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
மீண்டும் தரங்கா: இரண்டு போட்டி தடைக்குப்பின் தரங்கா மீ்ண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் அணிக்கு ஆறுதல் தருவாரா எனத்தெரியவில்லை. டிக்வெல்லா ரன் சேர்த்தாலும், குசால் மெண்டிஸ் ஏமாற்றுகிறார். இளம் வீரர் முனவீராவை களமிறக்கியும் வெற்றி பெற முடியவில்லை. மாத்யூஸ், திரிமான்னே ஆறுதல் தருகின்றனர்.
எடுபடாத பவுலிங்: இத்தொடரில் மலிங்காவின் ‘வேகம்’ சுத்தமாக எடுபடவில்லை. 4 போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தி, எதிர்காலம் பற்றிய குழப்பத்தில் உள்ளார். பெர்னாண்டோவும் சவால் தர திணறுகிறார். இரண்டாவது போட்டியில் மிரட்டிய (6 விக்.,) தனஞ்ஜெயாவின் ‘சுழலும்’ திசை மாறிப்போனது. சுழற்பந்துவீச்சாளர் புஷ்பகுமார் வரவும் பலன் தரவில்லை.
மிரட்டும் மழை
கொழும்பு நகரின் வெப்பநிலையை பொறுத்தவரை இன்று அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியாக இருக்கும். இடி மின்னலுடன் பலத்த மழை வர 100 சதவீத வாய்ப்புள்ளதால், போட்டியில் பாதிப்பு ஏற்படலாம்.
இணையுமா இலங்கை
கடந்த 10 ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணிதான் அதிக முறை (2) முழுமையாக (0–5) இழந்துள்ளது. கடந்த 2008 மற்றும் 2011ல் இப்படி மோசமாக செயல்பட்டது. இன்று இந்தியா வென்றால், இப்பட்டியலில் இலங்கை அணியும் இணையும். ஏற்கனவே, 2014ல் இந்திய மண்ணில் 0–5 என தொடரை இழந்திருந்தது.
நாடு திரும்பும் தவான்
தாயார் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதால், ஷகர் தவான் உடனடியாக இந்தியா திரும்புகிறார். இன்றைய போட்டி மற்றும் ‘டுவென்டி–20’ யிலும் (செப்.6) பங்கேற்க மாட்டார். லோகேஷ் ராகுல், ரகானே இருப்பதால் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.