பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான வேலைகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சுமத்தியுள்ளார்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 நாள்கள் கழித்தே வாக்கு இயந்திரங்கள் சேகரிப்பு மையத்துக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதனைமுன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதிவென்றில்,
“மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான செயல்களைச் செய்தன. சில இயந்திரங்கள் பாடசாலை வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டு, 2 நாள்கள் காணாமல் போயின. சில இயந்திரங்கள் தங்கும் விடுதி ஒன்றில் கூத்தடித்துக் கொண்டிருந்தன. பிரதமர் மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான வேலைகளைச் செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன.
ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது கவனத்துடன் இருக்க வேண்டுமென்று” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

