இத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள் முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்கியது. சாலைகளில் ஆலங்கட்டி மழைப் பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுக்கமாகி பாறை போல் மாறியது. இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இத்தாலிய தலைநகரின் கிழக்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை அதிகமாக பொழிந்தது. அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலைகள் முழுவதும் மூடி மறைந்தது.
மேலும் நகரத்தில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டின் மீது பனிக்கட்டி நீர் ஆறு போல ஓடியது. நகரில் பல்வேறு இடங்களில், பேருந்துகள் மற்றும் கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சில சாலைகளில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. புளோரன்ஸ், பிசா, மிலன் மற்றும் வடக்கு இத்தாலியின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

