Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆஸிக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தும் முயற்சியில் இலங்கை

July 8, 2022
in News, Sports
0
ஆஸிக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தும் முயற்சியில் இலங்கை

கொவிடினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் வெற்றிபெறுவதை குறியாகக் கொண்டு இந்த டெஸ்டை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் பல விடயங்களைக் கருத்தில் கொண்டு துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.

வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இலங்கை அணியில் நான்கு வீரர்கள் கொவிடினால் பாதிக்கப்பட்டுள்ளமை மெலும் சிக்கலை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக துடுப்பாட்ட சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா கொவிடினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை இலங்கையின் துடுப்பாட்ட வரிசையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டுள்ளது.

மேலும் லசித் எம்புல்தெனிய நீக்கப்பட்டுள்ளதுடன் ப்ரவீன் ஜயவிக்ரம கொவிடினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே தனஞ்சயவுக்குப் பதிலாக பெரும்பாலும் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோவும் குழாத்தில் இடம்பெறுகின்றார்.

எவ்வாறாயினும் முதலாவது டெஸ்ட் போட்டியில் போன்று சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் இந்த டெஸ்ட் போட்டிக்கும் வழங்கப்பட்டால் இலங்கை வீரர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுவதுடன் சுழல்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச வேண்டிவரும்.

சர்வதேச ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியர்களுக்கு சிரமத்தைக் கொடுத்த இளம் சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் ரமேஷ் மெண்டிஸ் மூன்றாவது சுழல்பந்துவீச்சாளராக இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய கமிந்த மெண்டிஸும் அறிமுக வீரராக டெஸ்ட் அணியில் இடம்பெற்றால் சுழல்பந்துவீச்சு பலம் மிக்கதாக அமையும்.

கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்க கூடியவர். 23 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கமிந்து மெண்டிஸ் 6 சதங்கள், 12 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று கொவிடினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஏஞ்சலோ மெத்யூஸ் இன்றைய போட்டியில் விளையாடுவார் என அறிவிக்க்பட்டுள்ளது. அவரது பிரசன்னம் துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்துவதாக அமையும்.

பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ் தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடினால் இலங்கையினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியும்.

இது இவ்வாறிருக்க, முதலில் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைத்து முதல் இன்னிங்ஸில் கணிசமான ஓட்டங்களைக் குவிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

‘இந்த மைதானத்தில் நாங்கள் வெற்றிபெற்றபோதெல்லாம் சகலதுறைகளிலும் பிரகாசித்தோம். அப் போட்டிகளில் நாங்கள் திறமையாக துடுப்பெடுத்தாடியதன் மூலம் சுழல்பந்துவீச்சாளர்களின் பணி இலகுவாக்கப்பட்டது. தற்போது ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா இல்லாததால் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்கள் தங்களாலான அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தவேண்டும்’ என திமுத் கருணாரட்ன கூறினார்.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 212 ஓட்டங்களையும் 113 ஓட்டங்களையும் பெற  அவுஸ்திரேலியா  முதல் இன்னிங்ஸில் 321 ஓட்டங்களைக் குவித்தது. 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.

துடுப்பாட்ட வீரர்கள் சுவீப் ஷொட்டையே பிரயோகிக்காமல் வேறு பழக்கப்பட்ட துடுப்பாட்ட நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முதல் டெஸ்டில் அளவுக்கு அதிகமாக சுவீப் ஷொட் அடிக்கப்பட்டது குறித்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாட வேண்டும் என  திமுத் கருணாரட்ன கேட்டுக்கொண்டார்.

முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் பகுதிநேர பந்துவீச்சாளர் ட்ரவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் இலங்கை துடுப்பாட்டம் சரிந்ததால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிபெற்றது. அவர் 2.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆனால், அவர் துடுப்பாட்ட வீரராகவே அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இன்றைய போட்டியில் மற்றொரு துடுப்பாட்ட வீரரும் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளருமான க்ளென் மெக்ஸ்வெல் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அவரை அணியில் இணைப்பது குறித்து போட்டிக்கு முன்னர் தீர்மானிக்கப்படவுள்ளது.

அணிகள்

இல்ஙகை அணி பெரும்பாலும்: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ் அல்லது ஓஷத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், துனித் வெல்லாலகே, கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ஷன.

அவுஸ்திரேலிய அணி பெரும்பாலும்: டேவிட் வொர்னர், உஸ்மான் கவாஜா, மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித், ட்ரெவிஸ் ஹெட், கெமரன் கிறீன், அலெக்ஸ் கேரி, க்ளென் மெக்ஸ்வெல் அல்லது மிச்செல் ஸ்டார்க், பெட் கமின்ஸ் (தலைவர்), நேதன் லயன், மிச்செல் ஸ்வெப்சன்.

Previous Post

அவுஸ்திரேலியாவில் நியுசிலாந்து பிரஜைகளிற்கு வாக்களிக்கும் உரிமை

Next Post

அதிகரிக்கின்றது புகையிரதக்கட்டணங்கள்

Next Post
புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் |புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

அதிகரிக்கின்றது புகையிரதக்கட்டணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures