பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அரசாங்கத்தின் பங்காளி அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற இருக்கின்றது.
இந்த சந்திப்பின்போது முக்கியமான பல அரசியல் விடயங்கள், அரசாங்கத்துக்குள் எமக்கு இருக்கும் கருத்து முரண்பாடான விடயங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய இருப்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் பங்காளி அரசியல் கட்சிகளுடனான சந்திப்பொன்று இதற்கு முன்னர் இடம்றெ இருந்தபோதும் அந்த சந்திப்புக்கு கட்சி தலைவர்களைவிட அதிகமானவர்கள் கலந்துகொண்டிருந்ததால், பெரும்பாலான கட்சி தலைவர்கள் அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
அதனடிப்படையில் கட்சி தலைரவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் மேற்கொண்டிருந்த கோரிக்கைக்கமைய, கட்சி தலைவர்களுடனான சந்திப்பை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் இன்று மாலை 6மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சி, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜ கட்சி மற்றும் ஏனைய சிறிய கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.