யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அத்துமீறிய நடிகர் ஆர்யா மற்றும் அவரது படப்பிடிப்புக் குழுவினரால் வாசகர்கள் மற்றும் சுற்றுலாவிகள் விசனமும் குழப்பமும் அடைந்தனர்.
நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், அத்துமீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு
நடத்தப்பட்டுள்ளது என்று யாழ். மாநகர சபை ஆணையாளர் க.ஜெயசீலன் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார். இது குறித்து தன்னிடம் முறையிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்துகொண்டனர் என்று ஆணையாளர் தெரிவித்தபோதும் பொது நூலக ஊழியர்கள் சிலர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாவிகள் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தினர் என்று வாசகர்கள் சிலர் உதயன் பத்திரிகையிடம் விசனம் தெரிவித்தனர்.
சுமார் அரை மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது. அதற்கிடையில் நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.
நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பே இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
‘‘படப்பிடிப்புக்குழு இங்கு வருகைதருவதற்கு முதலில் எம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர். அது சம்பந்தமாக மாநகர ஆணையாளரிடமே தொடர்புகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தேன்.
பின்னர் மாநகர ஆணையாளரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் படப்பிடிப்புக்குழு வருகை தந்தது. அந்தக் கடிதத்தில் நூலகத்தின் வெளிப்புறம் திறந்தவெளிப் பகுதியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட அனுமதிக்கப்படுவதாக இருந்தது.
எனினும் வாகனத்தில் உள்ளே வருவது போன்ற காட்சி படமாக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு அனுமதித்தோம். ஆனால் அவர்கள் பின்பு நூலகத்தின் உட்புறமும் அத்துமீறி படப்பிடிப்பினை மேற்கொண்டனர்’’ என்றார் நூலகர்.