பெருமளவு ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட காலி, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த நபர் இன்று (15) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டு மற்றும் பல்வேறு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 148 ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கரந்தெனிய, மடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த, சுச்சீ என அழைக்கப்படும் டொனன் குமார ரணவீர என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (14) பொலிஸ் விசேட அதிரடைப்படையின் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இலச்சினை கொண்ட, LTTE யினால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பிலான ஆங்கிலம், தமிழ் மொழியில் எழுத்தப்பட்ட புத்தகம் ஒன்றும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.