இங்கிலாந்தில் உள்ள சர்வதேச கல்லூரியில் ஆயிரமாவதாக சேர்ந்த இந்திய மாணவருக்கு 90 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் பர்மிங்கம் சிட்டி யுனிவர்சிட்டி இன்டர்நேஷனல் கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த சர்வதேச கல்லூரி தொடங்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குள் தான் ஆகின்றது.
பர்மிங்காம் பல்கலைக்கழகம், நேரடி சேர்க்கை பெற முடியாத சர்வதேச மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பயிலுவதற்கு இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இதுபோன்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஆயிரமாவது இடத்தில் இந்திய மாணவர் ரசித் படேல் சேர்ந்துள்ளார்.
ஆயிரமாவது மாணவரான படேலுக்கு, பல்கலைக்கழகம் 90 ஆயிரம் ரூபாய் (ஆயிரம் பவுண்டு) கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது. ரசித் படேல் கலை மற்றும் வடிவமைப்பு படிப்பதற்காக மும்பையில் இருந்து இங்கிலாந்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த உதவித்தொகை எனது படிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு வந்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் முதல் நாளிலேயே நான் ஒரு வரலாற்றை உருவாக்குவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை” என்றார்.
கல்லூரி முதல்வர் செரில் பத்ஹாம்ஸ் கூறுகையில், “1000 மாணவர்கள் சேர்க்கை என்ற இந்த மைல்கல்லை அடைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 5 ஆண்டுகளுக்குள் என்பது உண்மையிலேயே சாதனை. தொடர்ந்து கடுமையாக உழைத்த எங்களது நிர்வாக குழுவினரே இந்த வெற்றிக்கு காரணம்” என்றார்.