ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தானும் இலங்கையும் தகுதி பெற்றன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் 7 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து இலங்கையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மூவகை சர்வதேச கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் வெற்றி கொள்ளக்கூடும் என்ற ஒரு நிலை போட்டியின் ஒரு கட்டத்தில் ஏற்பட்டபோதிலும் 19 வயதான நசீம் ஷா கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ஆப்கானிஸ்தானின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கினார்.
ஆப்கானிஸ்தானுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதை அடுத்து அவ்வணி வீரர்கள் சோகம் தாங்காதவர்களாக கண்ணீர் சிந்தியாவாறு அரங்கை விட்டு வெளியேறினர்.
ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அணித் தலைவர் பாபர் அஸாம் (0), பக்கார் ஸமான் (5) ஆகிய இருவரும் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்நோக்கியது. (18 — 2 விக்.)
எவ்வாறாயினும் மொஹம்மத் ரிஸ்வான் 20 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் 30 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானுக்கு சற்று தெம்பூட்டினர். (87 – 4 விக்)
ஆனால், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானின் 5 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். (118 – 9 விக்.)
ஷதாப் கான் (36), மொஹமத் நவாஸ் (4), குஷ்தில் ஷா (1), ஹரிஸ் ரவூப் (0), அசிப் அலி (16) ஆகியோரே 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தவர்களாவர்.
எனினும் 10ஆம் இலக்க வீரர் நசீம் ஷா கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்சர்களை விளாசி பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். அவர் 4 பந்துகளில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பரீத் அஹ்மத் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தபோதிலும் பின்னர் ஓட்டங்கள் வேகமாக வரவில்லை.
பவர் ப்ளேயில் 2 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் எஞ்சிய 14 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் 23 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 17 ஓட்டங்களுடனும் ஹஸரத்துல்லா ஸஸாய் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
மொத்த எண்ணிக்கை 78 ஓட்டங்களாக இருந்தபோது கரிம் ஜனத் (15) ஆட்டமிழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 13 ஓட்டங்கள் சேர்ந்தபோது நஜிபுல்லா ஸத்ரான் (10), அணித் தலைவர் மொஹமத் நபி (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இப்ராஹிம் ஸத்ரான் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 10 ஓட்டங்களுடனும் ராஷித் கான் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.