தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சரவணபவன் ஆகியோர், மகிந்த தரப்புக்கு தாவவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்து தம் மீது அவதூறு பரப்பியமைக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பொலிஸில் நேற்று முறைப்பாடு பதிவு செய்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தான் மகிந்த அணிக்கு தாவவுள்ளதாகவும் அதற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சரவணபவன் ஆகியோரும் கட்சி தாவவுள்ளதாகவும் பல கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒலிப் பதிவு இணைய ஊடகத்தில் நேற்று வெளியானது.
உண்மைக்குப் புறம்பாக தம் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவித்து அவருக்கு எதிராகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
