Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆட்கொணர்வு மனு நீதிமன்றில் நிராகரிப்பு!

April 26, 2018
in News, Politics, World
0

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்குகள் மே மாதம் 22ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சாட்சியங்களில் தெரிவித்தபடி, காணாமல் போனவர்கள் என்ன வகையான பேரூந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள், என்ன இலக்கமுடைய பேரூந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்று சாட்சியத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடந்த (24-04-2018) புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் காணாமல் போயுள்ளவர்கள் என தெரிவிக்கப்ப்பட்டவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டார்களா அல்லது காணாமல் போனார்களா என்பதைத் தீர்மானிப்பது முடியாதுள்ளது என்றும், காணாமல் போனார்கள் என தெரிவிக்கப்பட்டவர்களுக்கு இந்த மனுக்களின் எதிர்தரப்பினர் பொறுப்பு கூற வேண்டியதில்லை என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் குறிப்பிட்டார்.இந்த ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணைகளின்போது ஆட்கள் காணாமல் போன சம்பவம் முல்லைத்தீவு நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றிருப்பதனால், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், வடமாகாண அமைச்சருமாகிய அனந்தி சசிதரனின் கணவருமாகிய எழிலன் சம்பந்தப்பட்ட மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மூன்று வழக்குகளின் மனுதாரர்களான விசுவநாதன் பாலந்தினி, கந்தசாமி பொன்னம்மா, கந்தசாமி காந்தி ஆகியோருடன் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.

அதனையடுத்து,  புதன்கிழமை இந்த மூன்று வழக்குகளும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த அறிக்கைகளின் இறுதிப்பகுதியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும் அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் கோரப்பட்டிருந்ததே தவிர, அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என சட்டத்தரணி ரட்னவேல் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அத்துடன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதி மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவற்றை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த கட்டமாக இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் முடிவெடுப்பதற்காக தவணையொன்றைத் தரவேண்டும் என்று மன்றில் கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கையை ஏற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன், சசிமகேந்திரன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவிட்டதுடன், இந்த வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவத்திடம் சரணடையுமாறும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக அளித்த உத்தரவாத அழைப்பை ஏற்று பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் இறுதி யுத்தத்தின்போது மே மாதம் 18 ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களில் 14 பேர் தொடர்பில் இரண்டு தொகுதிகளாக அவர்களுடைய உறவினர்களினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் சம்பந்தமாக விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் இந்த வழக்குளைப் பாரப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மூன்று வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, அந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளே நேற்று புதன்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நல்லாட்சி அரசாங்கம் 2020 இற்குள் நல்ல தீர்வினை முன்வைப்பார்கள்

Next Post

பிணைமுறி விநியோக மோசடி : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

Next Post

பிணைமுறி விநியோக மோசடி : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures