2023 ஆம் ஆண்டில் வெளியாகி தேசிய விருதினை வென்ற ‘ குற்றம்கடிதல்’ எனும் தமிழ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். கே. ஜீவா இயக்கத்தில் உருவாகும் ‘ குற்றம்கடிதல் 2 ‘ படத்தில் தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஜே எஸ் கே சதீஷ்குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பி. எல் .தேனப்பன் , சாந்தினி தமிழரசன், ஜோவிகா லிவிங்ஸ்டன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ரோஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜி. சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு டி .கே இசையமைக்கிறார். மாணாக்கர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியரின் உள்ளார்ந்த வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஜே எஸ் கே நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில் , ”அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இந்திய அரசாங்கம் நல்லாசிரியர் விருதினை அறிவிக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சி ரசிகர்களை கவரும் ”என்றார்.
இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.