பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபற்ற இலங்கை வீரர் வினோத் டில்ஷான் தகுதிபெற்றுள்ளார்.
ஆண்களுக்கான 45 கிலோ கிராம் சாதாரண வகை மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் மிர்ஜாலோல் முக்கமிலோவ் என்பவரை வினோத் டில்ஷான் இன்று இரவு 8.15 மணிக்கு எதிர்த்தாடவுள்ளார்.
இன்று பிற்பகல் 1.00 மணியவில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரர் ஜோன் ரோ மலாஸார்ட்டேயை 13 – 8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வினோத் டில்ஷான் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறி இருந்தார்.
எனினும் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தான் வீரர் அடிலெட டொலோபெக்கோவிச்சிடம் 0 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வினோத் டில்ஷான் தோல்வி அடைந்தார்.
இதனை அடுத்தே வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உஸ்பேகிஸ்தான் வீரரை அவர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான சாதாரண வகை மல்யுத்தத்தின் தகுதிகாண் சுற்றில் தஜிகிஸ்தான் வீரர் யோக்கப் இப்ரோநோவ் என்பவரிடம் 0 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி வீரர் சஞ்சீவ் தினுஷாந்த் தோல்வி அடைந்தார்.
51 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான தகுதிகாண் சுற்றில் கஸக்ஸ்தான் வீரர் தனயெல் ஆப்திகாசிம் என்பவரிடம் 0 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தீக்ஷன கருணாரட்ன தோல்வி கண்டார்.
பெண்களுக்கான 46 கிலோக கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஹனானோ ஓயாவிடம் இலங்கை வீராங்கனை யொஹானி சவின் 0 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பெண்களுக்கான 46 கிலோக கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை முனிசா மிங்யாஷரோவாவிடம் இலங்கை வீராங்கனை பியுமி சத்சரணி ரம்புக்வெல்ல 0 – 10 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார்.

