உஸ்பெகிஸ்தானில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான அடைவு மட்டத்தை இலங்கையைச் சேர்ந்த 6 மெய்வல்லுநர்கள் எட்டியுள்ளனர்.
தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22), புதன்கிழமை (23) ஆகிய இரண்டு தினங்களில் நடத்தப்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான திறன்காண் போட்டியின்போதே இந்த 6 பேரும் அடைவு மட்டத்தை எட்டினர்.
அடைவு மட்டத்தை எட்டியவர்கள்
400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.87 செக்கன்களில் நிறைவு செய்த அயோமல் அக்கலன்க (அடைவு மட்டம் 54.00 செக்), உயரம் பாய்தலில் 2.00 மீற்றர் உயரத்தைத் தாவிய ஜீ. எல். அர்த்தவிது, நிலுபுல் பெஹசார தேனுஜ (அடைவு மட்டம் 2.00 மீ.), கோலூன்றி பாய்தலில் 4.65 மீற்றர் உயரத்தை தாவிய மலிந்தரத்ன சில்வா (அடைவு மட்டம் 4.65 மீ.) ஆகியோர் ஆண்கள் பிரிவில் அடைவு மட்டத்தை எட்டினர்.
பெண்கள் பிரிவில் நிர்மலி விக்ரமசிங்க, துலாஞ்சன ப்ரதீப்பனி ஆகிய இருவரும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 47.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் அடைவு மட்டத்தை (4:48.00) எட்டினர்.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற திகன, ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலை வீரர் எச். அபினேஷ், பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற அதே பாடசாலையைச் சேர்ந்த என். அபிநயா ஆகிய இருவரும் அடைவு மட்டத்தை சிறு வித்தியாசத்தில் எட்டத்தவறினர்.