தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான ஆசிய இளையோர் மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் கண்டி, திகன, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். அபிநயாவும் எச். அபினேஷும் 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.
பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 11 நிமிடங்கள், 49.85 செக்கன்களில் நிறைவுசெய்த என். அபிநயா முதலாம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள், 34.97 செக்கன்களில் நிறைவு செய்து எச். அபினேஷ் முதலாம் இடத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
அப் போட்டியில் அவரது சக பாடசாலை வீரர் ஆர். விதுஷன் (9:47.60) 4ஆம் இடத்தைப் பெற்றார்.
இதே போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியைச் சேர்ந்த கே. திவாகர் (9:35.40) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இதன் மூலம் மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் சிறுக சிறுக முன்னேற்றம் அடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியிலும் திகன மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி வீரர் ஏ. அன்தனி ராஜ் (15.13 செக்.) 3ஆம் இடத்தைப் பெற்றார்.