வீதியில் ஒரு ஆசிரியர் செல்லும் போது அவரின் உடையலங்காரத்திலிருந்து ஒரு ஆசிரியர் என்பதனை முன்பு இலகுவில் அடையாளம் காணமுடியுமாக இருந்தது. ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. ஆசிரியர் யார்? மாணவர் யார்? என்று ஆராயவேண்டியுள்ளது.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,கோரிக்கைக்குச் செவிசாய்ப்பு
தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அவர்களின் பாடசாலை வருகைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது அரசு. நீண்ட காலப் போரால் இடம்பெயர்வுகள், ஆவண அழிவுகள் என்பற்றுக்குத் தொண்டர் ஆசிரியர்கள் முகம் கொடுத்திருந்தனர்.
அவர்களால் தமது பாடசாலை வருகைகளை நிரூபிக்க முடியவில்லை. அவர்களிடம் உறுதிமொழிப் பத்திரத்தைப் பெற்று அவர்களின் நீண்டகாலச் சேவையை உறுதிப்படுத்தலாம் என்று நான் அபிப்பிராயம் வழங்கினேன். சற்றுத் தாமதத்தின்பின்னர் கொள்கை அளவில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எமது தொண்டர் ஆசிரியர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் எமது அழுத்தங்களால் நியமனங்களை வழங்குவதற்கு அரசு இணக்கம் தெரிவித்தது.
தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய அதே பாடசாலைகளிலேயே உங்களுக்குரிய நிரந்தரநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் கற்பித்தல் நிகழ்வுகள் எதுவித தடங்கலுமின்றிச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு அதுவாய்ப்பாக அமையும் என்று நம்புகின்றேன்.
முன்னுதாரணம்
ஆசிரிய ஆசிரியைகளே மாணவ, மாணவியரின் முன்னுதாரணங்களாகத் திகழக்கூடியவர்கள். மாணவர்கள் ஒரு ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சுவழக்கு, அறிவூட்டுகின்ற விதம் ஆகியஅனைத்தையும் இலகுவில் மனதில் கிரகித்து அந்த வழியில் நடக்க முயற்சிப்பார்கள். முன்னைய காலங்களில் ஒவ்வொரு ஆசிரியனும் அல்லது ஆசிரியையும் தமது உடல் உளத் தூய்மைகள், ஆடையலங்காரம், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், சமயநெறிப் பின்பற்றுதல்கள் ஆகிய அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கினார்கள்.
கொழும்புத் தலைமையின் பரிசீலனைக்கு
தலைமை அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் போன்றோர் இங்கிருப்பதால் நானும், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரும் சில விடயங்களை உங்கள் பரிசீலைக்காகத் தருகின்றோம்.
மாகாண சபைகளுக்கான சட்டத்தில் கல்வி என்பது மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்ட விடயம். ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வரப்படவேண்டும்.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மட்டுமே மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வகைகளைச் சேர்ந்த க.பொ.த. உயர்தரத்தில் தகைமை பெற்றவர்கள், டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடிய அதிகாரத்தை கொழும்பு தன்னிடம் வைத்துள்ளது.
அந்த அதிகாரமும் மாகாண சபைகளிடம் வழங்கப்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகள் என்பனவற்றுக்குப் பயிற்சி ஆசிரியர்களை வடமாகாணத்தின் தேவைக்கேற்ப தெரிவு செய்யும் அதிகாரம் எம்மிடம் தரப்படவில்லை. அந்த அதிகாரம் மாகாண சபைகளிடமே இருக்கவேண்டும்.
கரவான நடவடிக்கை
இலங்கையில் மாகாணப் பாடசாலைகள், தேசியப் பாடசாலைகள் என்ற இரு வகையான பாடசாலை முறைமைகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. தேசியப் பாடசாலைகள் கொழும்பு அரசின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாணச பையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணப் பாடசாலைகளைப் பாதிக்கும் பல செயற்பாடுகள் கொழும்பு அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
மாகாணப் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருக்கின்ற மாணவர்களை அதிக அளவில் தேசியப் பாடசாலைகளில் சேர்ப்பதற்கு தேசிய பாடசாலைகளின் வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், தேவைக்கு அதிகமான ஆசிரியர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளால் மாகாணத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு அருகில் உள்ள பாடசாலைகளைப் பாதிக்கின்ற வகையில் தேசிய பாடசாலைகளை வளர்க்கும் போக்குத் தவறான அணுகுமுறையாகும்.
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஒரே கல்வித் திட்டம், ஒரே வகையிலான கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போது சில பெரிய பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக நியமிப்பது மாகாணப் பாடசாலைகளுக்குப் பெரும் பாதிப்பாக அமைகின்றது.
தேசிய பாடசாலைகளுக்கென வேறுவகையான கல்வித் திட்டம், வேறு விதமானபாடநூல்கள், வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் விரும்பியவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் அந்தத் தேசியக் கல்லூரிகளில் இணையலாம். ஆனால் ஒரே வகையான கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளிடையே வேறுபாடுகளை வளர்ப்பது பெற்றோர் மாணவர்களிடையே குழப்பங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுகின்றன.
இப்படியான விடயங்களை இங்கு வந்துள்ள தலைமை அமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் கவனத்தில் எடுக்க வேண்டும். மாகாண சபைகளின் சட்டத்தில் குறிப்பிட்டமைக்கு அமைவாக கல்வி தொடர்பான முழுமையான செயற்பாடுகள் மத்திய அரசால் தலையிடப்பட முடியாத விதத்தில் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் – என்றார்.

