எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்க வேண்டும் என்பது தொடர்பில் முரண்பட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, அதற்கான நேரம் வரும் வரையிலும் அவசரபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில், ஜனாதிபதியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்று ஒருதரப்பினர் கோரியுள்ளனர். மற்றுமொரு தரப்பினர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்தவேண்டுமென்று கோரியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த மற்றுமொரு தரப்பினர், இவ்விருவருமே வேண்டாமென தெரிவித்துள்ளதுடன், முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷவை நிறுத்தவேண்டுமென கருத்துரைத்துள்ளனர் என்றும் அறியமுடிக்கின்றது.
இந்நிலையில், பங்காளி கட்சிகளின் தலைவர்களிடம் கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முரண்பட்டுக்கொள்ளவேண்டிய தேவையில்லை. நேரம் வரும்போது, அதற்கான அறிவிப்பை விடுப்போம், அதுவரையிலும் இந்த விவகாரத்தில் முரண்பட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.