பங்களாதேஷுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, கடைசி அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
அரை இறுதியில் விளையாட வேண்டுமானால் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தத்துக்கு மத்தயில் களம் இறங்கிய வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா சகல துறைகளிலும் பங்களாதேஷை விஞ்சும் வகையில் விளையாடி வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்துகொண்டது.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இலகுவாக வெற்றிபெற்றது.
ஆரம்ப வீராங்கனைகளான லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்து வெற்றி இலக்கைக் கடக்க உதவினர்.
லோரா வுல்வார்ட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 66 ஓட்டங்களுடனும் தஸ்மின் ப்றிட்ஸ் 4 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் பெரும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவி நிகார் சுல்தானா 30 ஓட்டங்களையும் சோபனா மோஸ்தரி 27 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அயாபொங்கா காகா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
சாதனை நிலைநாட்டிய இங்கிலாந்துக்கு இலகுவான வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கடைசி முதல் சுற்றுப் போட்டியில் சாதனை நிலைநாட்டிய இங்கிலாந்து 114 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்கள் ரீதியாக ஈட்டப்பட்ட மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் தோல்வி அடையாத 2ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. மற்றைய குழுவில் அவுஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாகத் திகழ்கிறது.
பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது.
இதன் மூலம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்து இங்கிலாந்து புதிய சாதனை நிலைநாட்டியது.
தாய்லாந்துக்கு எதிராக கென்பெராவில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா 3 விக்கெட்களை இழந்து குவித்த 195 ஓட்டங்கள் இதற்கு முன்னர் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையாக இருந்தது.
இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 5ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 33 ஓட்டங்களாக இருந்தபோது அதன் 2ஆவது விக்கெட் சரிந்தது.
எனினும் நெட் சிவர் ப்றன்ட் 2 சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இங்கிலாந்தை பலப்படுத்தினார்.
3ஆவது விக்கெட்டில் டெனி வியட்டுடன் 74 ஓட்டங்கபை; பகிர்ந்த நெட் சிவர் ப்ரன்ட், 5ஆவது விக்கெட்டில் அமி ஜோன்ஸுடன் மேலும் 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
நெட் சிவர் ப்றன்ட் 40 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 12 பவுண்டறிகள, ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை விளாசினார்.
டெனி வியட் 33 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் அமி ஜோன்ஸ் 31 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் பாத்திமா சானா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
மிகவும் கடினமான 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வியுடன் தென் ஆபிரிக்காவிலிருந்து விடைபெறுகிறது.
பின்வரிசை வீராங்கனை தூபா ஹசன் 28 ஓட்டங்களைப் பெற்றார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவர் அநாவசியமாக இரண்டாவது ஓட்டத்தைப் பெற விளைந்து ரன் அவுட் ஆனார். அவருக்கு அடுத்ததாக பாத்திமா சானா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் பாகிஸ்தானின் நிலை மேலும் சங்கடத்திற்குள்ளாகி இருக்கும்.
இங்கிலாந்து பந்துவீச்சில் கெத்தரின் சிவர் ப்ரன்ட் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சார்ளி டீன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அரை இறுதிகள்
அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 1ஆவது அரை இறுதிப் போட்டி வியாழக்கிழமையும் (23), இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2ஆவது அரை இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமையும் (24) கேப் டவுன் விளையாட்டரங்கில் நடைபெறும்.