உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 340 உள்ளுராட்சி சபைகளில் 239 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி 19 மாவட்டங்களில் அபார வெற்றியை அடைந்துள்ளதாகவும், இதன் மூலம் அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதனை அரசாங்கத்தின் கடந்த 3 வருட ஆட்சி தொடர்பான மக்கள் கருத்துக் கணிப்பாகவே நாம் நோக்குகின்றோம். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் பகிரங்க அறிவித்தல் விடுத்தார்.
தேர்தல் முடிவுகளின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.