கூட்டரசில் ஆளும் தரப்பாக பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதியை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் அவர்கள் அரசை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிப் பதவி தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் நடந்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது-நாடாளுமன்றத்தில் வெவ்வேறு கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றில் அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரு தரப்பினர் எதிரணியில் அங்கம் வகிக்கின்றனர்.
எனினும் அவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே உள்ளனர். அவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி பதவியை தரக்கோருகின்றனர். ஆனால் இது சாத்தியமற்றதாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 23 பேர் அமைச்சரவையில் உள்ளனர். அரசின் தீர்மானங்களை முன்னெடுக்கின்றனர். ஆகையால் அதே அணியை எதிர் கட்சியாக அங்கீகரிக்க கோருவது ஏற்றுகொள்ள முடியாது.- என்றார்.