அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வும் திருக்கோவிலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பி.நந்தபாலு தலைமையில் திருக்கோவில் 04 பிரதான வீதியில் இன்று (17.05.2025) காலை இடம்பெற்று இருந்தது.

இதன்போது இறுதி யுத்தத்தின் போது உயிர் இழந்த உயிர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி தொடக்கம் 18வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு இருந்ததுடன் இவ் நினைவு நிகழ்வில் தமிழரசு கட்சியின் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் காரைதீவு முன்னால் பிரதேசசபை தவிசாளரும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான கே.ஜெயசிறில் மற்றும் கட்சியின் பிரதேச கிளை நிருவாகிகள் தொண்டர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசம்ரி ஆகியோரின் அறிக்கைகளுக்கும் பதில் வழங்கி தனது நினைவு உரையை நிகழ்த்தி இருந்தனர்.
இரண்டாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இன்று (11.05.2025) யாழ். நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (Selvarajah Gajendran) ஆரம்பித்து வைத்தார்.
தமிழினப்படுகொலை நினைவுத்தூபி
இதேவேளை, கனடா (canada) பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிராம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் நேற்று (10) 4.8 மீற்றர் உயரத்தில் உள்ள குறித்த உருக்கு நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகவும் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை உலகுக்கு கூறும் வகையிலும் குறித்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
மௌனமாகவே நினைவுகூர முடியாது
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தையொட்டி, தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, உயிரிழப்புகள் மற்றும் காணாமற்போனோரின் நீதி தேடல் ஆகியவற்றை நினைவூட்டும் நிகழ்வுகள், பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில், 2025 மே 16ஆம் திகதி இன்று மாலை 5.30 மணியளவில், முன்னம்பொடிய்வேட்டை பகுதியில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், வரலாற்று நினைவுகளை எச்சரிக்கையாக சுமக்கும் அரசியல் செயற்பாடாகவும் அமைந்தது.
நிகழ்வில் பங்கேற்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், முள்ளிவாய்க்காலை மௌனமாகவே நினைவுகூர முடியாது, அது நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் செயலாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.