அம்பாறையில் இடம்பெற்ற வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 01 ஆம் திகதி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக முறையாக பொலிஸார் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தே ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.எம் ஹனிபா தெரிவித்தார்.
அத்துடன் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் – தனியார் வங்கிகள் மூடப்பட்டு, தனியார் பேரூந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கவும் வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில், உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடையுரிமையாளர் தாக்கப்பட்டதுடன் அதனை அண்மித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் உடைமைகள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன.