ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்குமான விசேட கூட்டமொன்று இன்று (07) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று (07) காலை 10.00 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரு கட்சிகளும் கைச்சாத்திட்டன.
இருப்பினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலர் மொட்டு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட எம்.பி.க்கள் பலரும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கருத்து தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, கூட்டணியில் ஒரு கட்சியாக பொதுஜன பெரமுனவுடன் வந்து இணைந்து பொதுத் தேர்தலை முகம்கொடுக்கலாம் என முன்னாள் மேல் மாகாண முதலமைச்சரும், தற்போதைய அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பொதுக் கூட்டமொன்றில் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

