அமைச்சரவை தீர்மானத்தின் பின்னரே பேரூந்து கட்டண அதிகரிப்பு இடம்பெற வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
பேரூந்து கட்டணம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை நேற்று (திங்கட்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர் கூறுகையில், ‘பேரூந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, பின்னர் அவ்விடயம் தொடர்பில் அறிக்கைகள் தயார்படுத்தப்படும்.
பேரூந்து கட்டணத்தை எந்த வழிமுறையின் கீழ் அதிகரிக்க வேண்டுமென்பது தொடர்பில் அமைச்சரவை தெளிவுப்படுத்துவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் மற்றுமொறு அறிக்கையும் தயார்ப்படுத்தப்படுகின்றது.
இவ்விடயத்தில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்துடனும் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை (புதன்கிழமை) முற்பகல் 9 மணியளவில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் செயலாளர் தலைமையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், பேரூந்து உரிமையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்த தீர்மானித்துள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

