இந்திய பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் மையம், அமெரிக்க பல்கலை கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்திய பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் மையம், கடந்த 2016ல் ஆந்திராவில் நிறுவப்பட்டது. இந்த மையம் தற்போது, பெட்ரோலியம் மற்றும் ரசாயன பொறியியல் துறைகளில் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளை வழங்குகிறது. மேலும், ஆற்றல் சார்ந்த துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்துடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்த மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், இருதரப்பும் இணைந்து பரஸ்பர ஒத்துழைப்பு, கடல்சார் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம், கூட்டு மாணவர் ஆய்வு திட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்த உள்ளன.

