அமெரிக்காவின் கலிபோர்னியா மகாண ஆளுநர் தேர்தலில் 22 வயது இந்தியர் போட்டியிடுகிறார். இந்தியாவை போலவே ஒலிபெருக்கியுடன் தெரு தெருவாக சென்று அவர் பிரச்சாரம் செய்து மக்களை ஈர்த்து வருகிறார்.
அமெரிக்காவில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. கலிபோர்னியாவில் ஆளுநராக இருந்த ஜெர்ரி பிரவுனின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு புதிய ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.கலிபோர்னியா ஆளுநர் பதவிக்கு சுபம் கோயல் (வயது 22) என்ற இந்தியர் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை விபுல் கோயல் இவர் லக்னோவில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் கருணாகோயல் இவர் மீரட்டை சேர்ந்தவர். சுபம் கோயல் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். பின்னர் அங்கு ஐடித்துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மொத்தம் 27 பேர் இந்த பதவிக்கு போட்டியிடுகின்றனர். இவர்களில் சுபம் கோயல் மிகவும் இளம் வயது உடையவர். கலிபோர்னியாவில் அதிகஅளவு இந்தியர்கள் வசிக்கின்றனர். வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இந்தியர்களின் பங்கு கணிசமானது. எனவே இந்தியரான சுபம் கோயலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர், ஒலிபெருக்கியை கையில் ஏந்தி கலிபோர்னியா நகர வீதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். அமெரிக்காவில் சமூகவலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக மட்டும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் சுபம் கோயல் இந்திய பாணியில் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருவது கலிபோர்னியா மக்களை ஈர்த்துள்ளது. இதுமட்டுமின்றி நவீன பிரச்சார முறைகளையும் பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து சுபம் கோயல் கூறுகையில் ‘‘கலிபோர்னியா ஐடித்துறை மட்டுமின்றி கல்வித்துறைக்கும் பெயர் பெற்ற இடம். இது சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் எனது முன்னுரிமை. லஞ்சத்தை ஒழிப்பது எனது முதல் பணியாக இருக்கும். பல்வேறு இனம் சார்ந்த மக்கள் அமெரிக்காவில் நிர்வாக அதிகாரத்தில் வரவேண்டும். அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களும் நிறைவேறும்’’ எனக் கூறினார்.

