Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி

September 6, 2018
in News, Politics, World
0

டிஜிட்டல் பத்திரிகை யுகத்தில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் “NRI Pulse” என்ற பத்திரிகையை நடத்தி வரும் முதல் இந்திய பெண் என்று லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் வீணா ராவ்.

12 ஆண்டுகளுக்கு முன்னதாக வீணா ராவ், ‘என்.ஆர்.ஐ பல்ஸ்’ என்ற மாதாந்திர பத்திரிக்கையை தொடங்கினார். வெளிநாட்டில் பத்திரிகை நடத்துவது மற்றும் வீணா ராவின் ஆர்வங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் சரத் பெஹாரா அவருடன் பேசினார்.

என்.ஆர்.ஐ பல்ஸ் என்ற பெயரின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் ஆசிய-அமெரிக்கர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் 2006ஆம் ஆண்டு, மாதாந்திர பத்திரிகையாக என்.ஆர்.ஐ பல்ஸ், தொடங்கப்பட்டது.

“ஒரு சமூகத்தை ஊக்குவிக்கும் ‘உந்துவிசை’ (Impulse) பத்திரிகை என்று ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். அது என் மனதிலேயே ஆழமாக பதிந்து போய்விட்டது. பலவிதமாக யோசித்து, பத்திரிகை ஒன்றை தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்”.

“ஆனால், அதற்கான திட்டமோ, முதலீடோ என்னிடம் இல்லை, என்னால் முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே ஆழமாக இருந்தது. வசதியாக வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு இப்படி முடிவு எடுப்பது என்னவோ மிகவும் சுலபமானதாகவே இருந்தது” என்று அந்த நாட்களை நினைவுபடுத்திச் சொல்கிறார் வீணா ராவ்.
அச்சு ஊடகத்தை மக்கள் பயன்படுத்துவது குறைந்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், மிகப்பெரிய பத்திரிகைகள்கூட மூடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த சூழலில், புதிய பத்திரிகை தொடங்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

ஒரு செய்தித்தாளை நடத்துவதில் வழக்கமாக ஏற்படும் சிரமங்கள், நிதி நெருக்கடிகள் என அனைத்தையும் வீணா ராவ் எதிர்கொண்டார். ஆனால் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருந்ததை வீணா ராவ் நினைவுகூர்கிறார்.

“பத்திரிகை நடத்துவது என்பது சாதாரணமான காரியம் இல்லை என்ற மிகப்பெரிய உண்மையை இத்தனை ஆண்டுகளில் நான் நிதர்சனமாக உணர்ந்துவிட்டேன். ஆனால் பிரச்சனைகளை கண்டு மனம் தளாராமல் நீடித்து நின்றதுதான் எனது பலம்” என்கிறார் வீணா.

“தினசரி காலையில் செய்தித்தாள் படிக்கும் வழக்கம் அமெரிக்காவில் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, இலவசமாக பத்திரிகையை கொடுப்பதுதான் எங்கள் முன்னால் இருந்த ஒரே வழியாக இருந்தது. மக்கள் அதிகமாக புழங்கும் மளிகைக் கடைகள், உணவகங்கள், ஆலயங்கள், நூலகங்கள் என பொது இடங்களில் இலவச பத்திரிகைகளை தொடர்ந்து வைத்தால், மக்கள் அவற்றை எடுத்துக் கொள்வார்கள். எனவே, நான் பத்திரிகைகளை இலவசமாகவே விநியோகிக்கும் முடிவை எடுத்தேன்.”

“செய்தித்தாளை இலவசமாக வழங்கியதால், செலவுக்காக விளம்பரங்களை மட்டுமே முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பத்திரிகைத் துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த காலகட்டம் மிகவும் கடினமானது. செய்தி சேகரிப்பது, எடிட்டிங், வடிவமைப்பு, லேஅவுட், பத்திரிகை விநியோகம் என அனைத்தையும் நானே நேரடியாக செய்தேன்” என்கிறார் வீணா.

“ஒரு கட்டத்தில், இனி முடியாது என்ற நிலைமையில், பத்திரிகை அச்சடிப்பதை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அதை செயல்படுத்தியும் விட்டேன். அதனால் பத்திரிகையின் ஒரு இதழ் வெளிவரவில்லை.”

பத்திரிகைக்கு மூடுவிழா

“எதிர்பாராத விதமாக, அடுத்த மாதத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுப்பதாக மின்னஞ்சலில் ஒருவர் செய்தி அனுப்பினார். சோர்ந்திருந்த என்னை அது ஊக்கப்படுத்தியது. மீண்டும் உற்சாகத்துடன் பத்திரிகை வேலையை தொடங்கிவிட்டேன்,” என்று தனது பின்வாங்கலையும், பிறகு முன்னோக்கி நகர்ந்ததையும் நினைவுகூர்கிறார் வீணா ராவ்.

அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு புனேயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் வீணா. சில பதிப்பகங்களுடன் வீணாவுக்கு ஏற்பட்ட தொடர்பு, அமெரிக்காவில் உள்ளூர் அமைப்புகள் மற்றும் வணிகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

“நான் அமெரிக்காவுக்குச் சென்ற பல ஆண்டுகளுக்கு பிறகும், சாலைகள் மீது இருந்த அச்சத்தால், அங்கு நான் வாகனங்களை ஓட்டியதில்லை. ஆனால் பத்திரிகை தொடங்கிய பிறகு, பத்திரிகை விநியோகத்திற்காக 70 இடங்களுக்கு குறைந்தபட்சம் 100 மைல்கள் பயணிக்க வேண்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் எனது அச்சத்தை கடந்து செயல்பட்டேன். ”
“650 டாலரில் ஒரு காரை வாங்கினேன். அதை பயன்படுத்த ஆரம்பித்தபோது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை தவிர்ப்பேன்.

பத்திரிகை விநியோகத்திற்காக பல நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கும். நன்றாக வண்டி ஓட்ட முடியும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட ஆறு மாதம் ஆனது. அதன் பிறகுதான் புதிய காரை வாங்கினேன்” என்று வீணா ராவ் கூறுகிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த வீணா ராவ், புனே ஃபெர்குன்சன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதைத்தவிர இதழியல் துறையில் பட்டய மேற்படிப்பையும் முடித்திருக்கிறார் வீணா.

மேலும் உமன்ஸ் எரா மற்றும் ஃபெமினா போன்ற இந்திய பத்திரிகைகளுக்கு கதைகள் மற்றும் கட்டுரைகளை அவர் ஆரம்ப காலத்தில் எழுதி வந்தார் வீணா.

அரிதான சாதனை

இந்தியாவிற்கு வெளியே பத்திரிகை வெளியிடும் முதல் இந்திய பெண்மணி என்று வீணா ராவின் பெயர் 2010ஆம் ஆண்டில் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
“எழுத்துத்துறையில் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் பத்திரிகையை நானே நடத்துவேன் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை என்று அமெரிக்காவைத் தவிர இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ என்னால் பத்திரிகை நடத்தியிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்” என்கிறார் வீணா ராவ்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கதை ஒன்றை எழுத ஆரம்பித்தார் வீணா. இந்த ஆண்டு இறுதிக்குள் தனது கதை புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துவிடுவேன் என்று வீணா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

Previous Post

”இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்க கூடாது”

Next Post

தெஹிவளையில் தீயில் சிக்கி பரிதாபமாக பலியான கர்ப்பிணிப் பெண்!

Next Post

தெஹிவளையில் தீயில் சிக்கி பரிதாபமாக பலியான கர்ப்பிணிப் பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures