பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனுடைய நிறுவனத்துக்கு ரூ.97 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா. இவரு குசும் ஃபின்சர்வ் என்னும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தப் பற்றி செய்தியாளர் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
அவர், “அமித் ஷாவின் மகன் நடத்தும் நிதி நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி மட்டுமே ஆகும். இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு இரு வங்கிகளின் ஐந்து கிளைகளில் இருந்தும் ஒரு அரசு நிறுவனத்திடம் இருந்தும் ரூ.97.35 கோடி கடன் அளிக்கபட்டுள்ளது. அதாவது இந்த நிறுவனத்தின் மதிப்பை விட பல மடங்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த போது ஜெய் ஷா வாங்கிய கடனுக்கு அவருடைய தந்தை அமித் ஷாவின் சொத்துக்களை ஈடாக காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷா மாநிலங்கள் அவை தேர்தலில் போட்டி இட்டபோது இந்தக் கடன்கள் குறித்து எதுவும் அவருடைய வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை.” என தெரிவித்துள்ளார்.
ஜெய் அமித் ஷாவுக்கு கடன் கொடுத்த வங்கிகளில் காலுபூர் கூட்டுறவு வங்கியும் ஒன்றாகும். இந்த வங்கியில் பாஜக தலைவரும் குஜராத் துணை முதல்வருமான நிதின் படேலும் அவர் மனைவியும் முக்கிய பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

