மொழி அழிந்தால் இனம் நிச்சயம் அழியும். இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து மொழியை மீட்கவும் காக்கவும் ஒருவன் வந்தான். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க ஒரு மீட்பன் வந்தான். அவன் பெயர் பிரபாகரன்என. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சி சார்பில் ‘தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம்’ கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் மே 18 நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மனோரஞ்சன் பயபாரி எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சீமான் பேசும்போது “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தமிழின மக்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதி மதங்களால் பிளவுபட்டு தன்னின பகையால் மோதி ரத்தம் சிந்தி வீழ்ந்ததால் அரசியல் வலிமையற்றவர்களாக நிற்கிறோம். சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை பாதுகாப்பாக வாழ வைக்க போராடித்தான் ஆக வேண்டும்.
தமிழன் என்று சொல்லும்போதே திமிரும் தைரியமும் வர வேண்டும். குனிந்து கும்பிடு போட்டு வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டால் உன்னை தூக்கி சுடுகாட்டில் போடுவார்கள். நாம் தமிழர் கட்சி மட்டுமே ‘தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க’ என்ற முழக்கங்களை முன்வைத்து அடிமைப்பட்ட தமிழ் தேசிய மக்களின் உரிமை மீட்சிக்கு போராடும் மக்கள் ராணுவம்.
மானம் அறம் வீரம் என வாழ்ந்த மறவர் கூட்டம் நாம். கடல் கடந்து நிலப்பரப்பை வென்று உலகத்தின் மூன்றாவது பெரிய வல்லரசை நிறுவிய ராஜராஜ சோழன் வாரிசுகள் நாம். யாரையும் அடிமைப்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. அப்படிப்பட்ட எங்களை சிங்களவன் அடிமைப்படுத்த நினைத்தால் விடுவதற்கு நாங்கள் பூனையோ எலியோ அல்ல… புலிகள்.

மூவேந்தர் வாரிசுகளான நாம் முள்ளிவாய்க்காலில் முடங்கிய நாள் இன்று. பச்சிளம் குழந்தைகள் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு செத்து மடிந்த நாள். ஈக்களும் எறும்புகளுக்கும் இரக்கம் காட்டியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உலகத்தை தழுவி பாடியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாள்.
என் மண்ணின் மக்கள் மரணித்தபோது உலகில் ஒருவன் கூட அழவில்லை. இதுதான் வரலாற்றில் பெரும் துயரம். எங்களுக்காகவும் பேசுங்களேன் என்று ஈழத்து குரல்கள் ஒலித்தன. உயிரைக் காப்பாற்ற பதுங்கிய பதுங்குழிகளே புதை குழிகளாக மாறின. ரத்தமும் கண்ணீரும் சுமந்து பிரசவித்த தாய் தன் வயிற்றுக்குள் பிள்ளைகளை வாங்கிக் கொண்ட அவலம் நிகழ்ந்தது.
13 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழர்கள் ஏன் சுதந்திரமாக வாழக்கூடாது? ஒரு இனம் தனக்கென ஒரு நாட்டை அடையும்போது தான் முழுமையான விடுதலை அடையும். உலகில் எல்லா மொழிகளும் மனிதன் பேசிய மொழி. ஆனால் தமிழ் இறைவன் பேசிய மொழி. சிவன் முருகன் மாயோன் ஆகியோர் என் மூதாதையர்கள்.
கடவுளை கடன் கொடுத்த இனத்தின் மக்கள் நாங்கள். உலக அறிஞர்களால் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். தனித்து இயங்கக்கூடிய செம்மொழி. இந்த மொழி அழிந்தால் இனம் நிச்சயம் அழியும். இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து மொழியை மீட்கவும் காக்கவும் ஒருவன் வந்தான். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க ஒரு மீட்பன் வந்தான். அவன் பெயர் பிரபாகரன்.
தமிழ் பேரினத்தின் வரலாறாகவே வாழ்ந்தான். அவன் வெடித்த முதல் தோட்டா உலகத்தையே அதிர வைத்தது. 200 ஆண்டுகளுக்கு பிறகு என் இனம் எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டான். ஆனால் உலகப் போரால் அந்த கனவு நசுக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொன்னது இந்த ஆட்சியாளர்கள் தான். இனத்தை கொன்று குவித்தவர்களுக்கே வரிசையில் நின்று வாக்கு செலுத்தி அடிமையாக வாழ்கிறோம். போரை நடத்தியது காங்கிரஸ். அவர்களுடன் நின்றவர்கள் திமுக. போராடி நிறுத்த வேண்டிய உயரத்தில் இருந்தவர்கள் அதிமுக. 2ஜி அலைக்கற்றைக்காக பாராளுமன்றத்தை முடக்கிய பாஜக. தமிழினத்தின் எதிரிகள் இவர்கள் நான்கு பேரும்.