மயிலிட்டிக் கடற் பிரதேசத்தில் அநாதரவாக நீண்ட நாள்களாகக் காணப்படும் கப்பலிலிருந்து பொருள்களை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆவரங்காலைச் சேர்ந்த 5 பேர் காங்கேசன்துறை சிறப்புக் குற்றப் பிரிவுப் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
மயிலிட்டிக் கடற்கரையைப் பார்வையிட இளைஞர் குழு சென்றுள்ளது. அந்தக் கடற்பரப்பில் அநாதரவாக நிற்கும் கப்பலையும் சென்று பார்வையிட்டுள்ளனர். கப்பலில் உள்ள ஒரு வகையான பொருள்களை எடுத்து அழுத்திப் பார்த்துள்ளனர். அது ஆகாயத்தில் சென்று பிரகாசமாக வெடித்துள்ளது. இதனையடுத்து, அதேபோன்று கப்பலில் காணப்பட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் குழு சென்றுள்ளது.
இதனைக் கண்ணுற்ற சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸார், முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்களை மடக்கி கைது செய்தனர்.தமக்கு அது என்ன பொருள் என்று தெரியாது எனவும், ஆகாயத்தில் பிரகாசத்துடன் வெடித்தமையினால் அதை விளையாட்டுக்காக எடுத்துச் சென்றதாகவும், பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
