மக்கள் விடுதலை முன்னனணியினரை ஜனநாயக கட்டமைப்பிற்குள் நுழைய ஜே.ஆர். ஜயவர்தனவும், ரணசிங்க பிரேமதாசாவும் அன்று அனுமதித்தனர். இருப்பினும், அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள எந்தவொரு பயங்கரவாத செயலையும் செய்யும் என்ற சந்தேகம் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொறுப்பேற்கும். அத்துடன் ஆளும் தரப்பு பெரும்பான்மையைப் பெறாத, பிற உள்ளூராட்சி மன்றங்களில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதிகாரத்தை கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக அரசாங்கம் தொடர்பான தங்கள் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் அரசாங்கத்தை நிராகரித்து விட்ட நிலைமையே வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வாக்கு விகிதம் பெரிதாக வீழ்ச்சிக்கண்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 68 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் உள்ளூராட்சித் மன்றத் தேர்தலில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 62 சதவீத வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு 43 சதவீதமாகக் குறைந்துள்ளன.
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 18 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியால் 22 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடிந்துள்ளது. இதேபோல், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற கட்சிகளும் தமது வாக்கு சதவீதங்களை அதிகரித்துக் கொண்டுள்ளன. மக்கள் அரசாங்கத்தை தெளிவக நிராகரித்துவிட்டனர். இது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். கடந்த 5 மாதங்களாக, அரசாங்கத்தின் திட்டங்களால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எதிர்காலத்தில், உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிறுவும்போது எதிர்க்கட்சியின் ஒற்றுமையை அரசாங்கத்திற்கு நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வென்ற அதிக எண்ணிக்கையிலான உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை. மக்களின் வாக்குகளுக்கு மதிப்பு அளித்து, அதிக அளவிலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன. நாட்டின் பிரதமர் கூட தேர்தல் சட்டங்களை மீறுமாறு மக்களுக்கு பகிரங்கமாக அறிவுறுத்தினார். நாட்டில் ஜனநாயக தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்தது. எவ்வாறாயினும், களுத்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். தெரணியகலவில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் மேற்கொள்ளும்.
மக்கள் விடுதலை முன்னனணியினரை ஜனநாயக கட்டமைப்பிற்குள் நுழைய ஜே.ஆர். ஜயவர்தனவும், ரணசிங்க பிரேமதாசாவும் அனுமதித்தனர். இருப்பினும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் வாக்குப் பலம் குறைந்துபோயுள்ளது. அரசாங்கம் மீண்டும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை ஆட்சி செய்யுமா என்ற சந்தேகம் எழுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.