இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்டத்தின் 11ஆம் கட்டப் போட்டிகள் இன்று சனிக்கிழமை (27) பிற்பகல் நடைபெறும் போது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து களம் இறங்கும் மாத்தறை சிட்டி கழகமும் ஜாவா லேன் கழகமும் தத்தமது போட்டிகளில் அதிகபட்ச புள்ளிகளை ஈட்ட முயற்சிக்க உள்ளன.
தற்போதைய அணிகள் நிலையில் ஜாவா லேன் கழகத்தைவிட 2 புள்ளிகள் வித்தியாசத்தில் 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் மாத்தறை சிட்டி கழகம், காலி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள நியூ ஸ்டார் கழகத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்துக்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கவுள்ளது.

லார்பி ப்றின்ஸ், போவாடு ப்றின்ஸ், அணித் தலைவர் அடெவின் ஐசேக் ஆகிய ஆபிரிக்க வீரர்கள் மூவர் அணியில் இடம்பெறுவது மாத்தறை சிட்டி கழகத்துக்கு இதுவரை அனுகூலமான முடிவுகளைத் தந்துள்ளது. இன்றைய போட்டியிலும் அக் கழகம் வெற்றிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்க வீரர்கள் விளையாடுவதன் பலனாக உள்ளூர் வீரர்களினது ஆற்றல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால், மற்றைய கழகங்களில் இந்த முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இல்லை.
மறுபக்கத்தில் உள்ளூர் வீரர்களுடன் மாத்திரம் நம்பிக்கைக்கொண்டு விளையாடிவரும் நியூ ஸ்டார் கழகம் இன்றைய போட்டியில் ஆபிரிக்க வீரர்களைக் கட்டுப்படுத்தி எதிர்பாராத முடிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.
போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டாலும் வெற்றிதோல்வியின்றி முடிப்பதற்கு நியூ ஸ்டார் கழகம் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாவா லேன் எதிர் பெலிக்கன்ஸ்

அணிகள் நிலையில் 26 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கும் ஜாவா லேன் கழகம், குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் பெலிக்கன்ஸ் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
இ.போ.ச. கழகத்துடனான போட்டியில் கடந்த வாரம் தவறுகளை இழைத்ததால் 2 புள்ளிகளை இழந்த ஜாவா லேன் கழகம் இன்றைய தினம் வெற்றிபெற்று 3 புள்ளிகளைப் பெற்றால் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு சற்று அதிகரிக்கும். தோல்வி அடைந்தால் அதன் சம்பியன் வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, பெலிக்கன்ஸ் கழகத்துடனான போட்டியில் ஜாவா லேன் கழகம் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடுவது மிகவும் அவசியமாகும்.

எவ்வாறாயினும் பெலிக்கன்ஸ் கழகம் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் போட்டி முடிவை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் என கருதப்படுகிறது.
சென். மேரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சொலிட் கழகத்துக்கு எதிரான போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது சொந்த மண்ணில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள சென். மேரிஸ் கழகத்துக்கு சொலிட் கழகம் இன்று பாரிய சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கமுடியாது.
எனினும் சொலிட் கழகத்தை இலகுவாக கருதப் போவதில்லை எனவும் வெற்றியை மாத்திரம் குறவைத்து விளையாடவுள்ளதாகவும் சென். மெரிஸ் பயிற்றுநர் ஜஸ்மின் தெரிவித்தார்.
அணித் தலைவர் மரியதாஸ் நிதர்சன், செபமாலைநாயகம் சகோதரர்களான ஞானரூபன் மற்றும் ஜூட் சுபன் ஆகிய மூவரும் தேசிய அணிகளில் இடம்பெற்ற அனுபவசாலிகளாவர். அவர்களுடன் அணியில் இடம்பெறும் மற்றைய வீரர்களும் திறமையாக விளையாடினால் இன்றைய போட்டியில் சென். மேரிஸ் கழகம் வெற்றிபெறுவது உறுதி.
சுப்பர் சன் எதிர் இ.போ.ச.