அதர்ஸ் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ்
நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், ஹரீஷ் பெராடி, ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் மற்றும் பலர்
இயக்கம் : அபின் ஹரிஹரன்
மதிப்பீடு : 2/5
‘அதர்ஸ்- மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜேனரிலான படம்’ என படக்குழு வெளியீட்டிற்கு முன் விளம்பரப்படுத்தியதால்.. இந்த ஜேனரிலான தமிழ் படைப்புகளை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.
முக்கிய சாலை ஒன்றின் நடுப்பகுதியில் செயற்கையான தடுப்பை ஏற்படுத்தி அதில் மோதி விபத்துக்குள்ளாகும் வாகனத்திலிருந்து கொள்ளையடிப்பதற்காக கொள்ளையன் ஒருவன் காத்திருக்கிறான்.
அந்த வழியாக வரும் வாகனம் ஒன்று அவன் எதிர்பார்த்த வகையில் தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகிறது. சிறிது நேரத்தில் அந்த வாகனம் வெடித்து சிதறுகிறது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரிக்க தொடங்குகிறது. இந்த வழக்கு விசாரணை மாதவ் ( ஆதித்யா மாதவன்) எனும் காவல்துறை அதிகாரியின் தலைமையில் நடைபெறுகிறது.
இவருடைய விசாரணையில் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது மூன்று பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத் திறனாளி பெண்கள் என்றும், அதில் ஒருவர் இந்த விபத்தில் சிக்கும் முன் இறந்து விட்டார் என்றும், ஒரு ஆண் வாகனத்தை இயக்கிய சாரதியாக இருக்கலாம் என்றும் காவல்துறை கருதுகிறது. இதன் அடிப்படையில் புலன்விசாரணையை தொடங்குகிறார்கள்.
இதனிடையே ஒரு பிரபலமான தனியார் வைத்திய சாலையில் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார் மது( கௌரி ஜி. கிஷன்) . இவர் ஒரு பெண்ணிற்கு கருமுட்டை தானம் மூலம் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் போது.. ஏனைய பெண்மணிகளை போல் அல்லாமல் அவருடைய அசாதாரணமான நடவடிக்கையால் அதிர்கிறார். இது தொடர்பாக அவர் தங்களுடைய சிகிச்சையில் மேற்கொண்ட.. சிகிச்சை வரலாற்றை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கும் போது, அதில் ஆய்வகத்தில் தவறு நடந்திருப்பதை கண்டறிகிறார்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என ஆராயத் தொடங்குகிறார். இந்த நிகழ்வுக்கும் நெடுஞ்சாலையில் நடைபெற்ற வாகனவிபத்திற்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்ன நடந்தது? குற்றவாளி யார்? என்பதை காவல்துறை கண்டறிந்ததா? இல்லையா ? என்பதை பரபரப்பாக லாஜிக் மீறலுடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
காவல்துறை அதிகாரியின் விசாரணையில் அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்களின் மெத்தன போக்கு, அலட்சியம் ஆகியவை விசாரணையில் நம்பக தன்மையையும், பரபரப்பையும் வழங்குவதற்கு பதிலாக சோர்வையும், தொய்வையும் தருகிறது. ஆனால் முதல் பாதி நிறைவடையும் தருணத்தில் இயக்குநர் முன் வைத்திருக்கும் டிவிஸ்ட் – படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் வேறு வகையினதான பயணத்தையும், இதற்கு முற்றிலும் மாறாக உச்சகட்ட காட்சியில் வேறு விதமான பயணத்தையும் இயக்குநர் வடிவமைத்திருப்பது.. பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்காமல்.. அயர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ஏனென்றால் இயக்குநர் இந்தப் பூவுலகில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தினைக் கடந்து பாலின சிறுபான்மையினராக உள்ளவர்களின் சமூக அடையாளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டு.. அதனை பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ள தக்க அளவில் திரைக்கதையை நகர்த்தாமல்.. நேரடியாக பிரச்சார த்வொனியில் சொல்லியிருப்பது பலவீனம்.
ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறார்கள். புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் முதல் படத்திலேயே காவல்துறை அதிகாரியாக பொருத்தமாக நடித்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
ரசிகர்களிடம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் வைத்தியர் மது கதாபாத்திரத்தில் தோன்றி திரை கதையின் விறுவிறுப்புக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். மற்றொரு பிரபல நடிகையான அஞ்சு குரியன் காவல்துறையில் பணியாற்றும் பீனா எனும் கதாபாத்திரத்தில் தோன்றி திரைக்கதையின் பரப்பரப்பிற்கு தன் பங்கை அளித்திருக்கிறார்.
அதர்ஸ் – உதிர்ந்த ஃவெதர்ஸ்

