”அணு குண்டு தாங்கிய ஏவுகணையை செலுத்தும் கருவியின் பட்டன், எப்போதும் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளது,” என, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த, 2017ல், தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வட கொரியா, அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதுார ஏவுகணைகளை சோதனையிட்டு, உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால், அந்நாட்டுக்கு எதிராக, ஐ.நா., அமெரிக்கா, பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
இந்த தடைகளை சற்றும் மதிக்காமல், வட கொரியா தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பேசுகையில், ”வட கொரியாவை முற்றிலும் அழிப்போம்,” என, எச்சரித்தார். இந்நிலையில், புத்தாண்டு தினமான நேற்று, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், விடுத்துள்ள செய்தி:
அணு ஆயுத சோதனைகளை, பெரியளவில் தொடர்ந்து நடத்துவோம். மேம்படுத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் அதிகளவில் தயாரிப்போம். வட கொரியாவை, அணுசக்தி படைத்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை, நாம் வெற்றிகரமாக அடைந்துள்ளோம்.
அமெரிக்காவின் மத்திய பகுதிகளை தாக்கி அழிப்பதை இலக்காக வைத்து, நம் ஆயுத சோதனைகள் தொடரும். அணு குண்டு தாங்கிய ஏவுகணையை செலுத்தும் கருவியின் பட்டன், எப்போதும் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.