Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டின் நிலையை தக்கவைக்க 6 பில்லியன் டொலர்கள் தேவை

June 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

அடுத்த ஆறு மாதங்களுக்கு நாடு வீழாமல் இருக்க 6 பில்லியன் டொலர்களை நாம் தேடிக்கொள்ள வேண்டும். அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும்.

அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பின்னர் , எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சிப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு பல நிவாரண திட்டங்களை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதற்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். நாட்டிற்காக நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது.

அற்புதங்களால் செய்திட முடியாது

இங்கு எங்களது முதன்மையான கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் நாம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இது இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கும் காரியம் அல்ல. இந்த சவாலை அற்புதங்களால் செய்திட முடியாது. கோஷங்களிலிருந்து அல்ல. மந்திரத்தால் அல்ல. உணர்ச்சிகளால் அல்ல. புத்திசாலித்தனமாக சிந்திக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அவசியம்.

ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது. தற்போதைய நெருக்கடியால் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் உலக மசகு எண்ணெய் விலை 40% வரை உயரும் என்று சிலர் மதிப்பிட்டுள்ளனர். இந்த பின்னணியில் எரிபொருளுக்கான கூப்பன் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரிக்க முடியாது. எப்படியாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு 3,300 மில்லியன் டொலர் எரிபொருளைத் தேடிக் கொள்ள வேண்டும்.

எரிவாயு இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். நாங்கள் தற்போது எரிவாயு இறக்குமதி செய்ய பலதரப்பு உதவி, உள்ளூர் நாணயம் மற்றும் இந்திய கடன்களைப் பயன்படுத்துகிறோம். அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிவாயுவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும்

மேலும், அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இது. பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும். எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தேவையில்லாமல் சிந்திப்பதையும் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த கடினமான மூன்று வாரங்களை பொறுமையாக எதிர்கொள்வோம்.

நமக்குத் தேவையான சில உணவுகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம். மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த காலப்பகுதியில் எங்கள் அறுவடை குறைந்துள்ளது. இவ்வாறான நிலைமையை சிறுபோகத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளதுடன் அடுத்த பெரும் போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு இப்போதிருந்தே நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அந்த அறுவடை பெப்ரவரி 2023 இறுதியில் கிடைக்கும். அரிசியைப் பற்றி பார்த்தால், நம் நாட்டின் வருடம் ஒன்றிற்கான அரிசியின் தேவை 2.5 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும். ஆனால் எங்களிடம் 1.6 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இந்த நிலை நெல் மற்றும் பல பயிர்களுக்கும் பொதுவானது. அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நமது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டொலர் அளவில் செலவாகும்.

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளூர் விவசாயத்தை உயர்த்த இரசாயன உரங்கள் தேவை. நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்களை இறக்குமதி செய்வதற்கு வருடத்திற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். ஒரு பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்ய வேண்டும். அல்லது பணம் மற்றும் முயற்சி விரயமாகி விடும்.

தற்போது நாட்டுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பல்வேறு சர்வதேச உதவி திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். மேலும், பல்வேறு நாடுகளின் உதவிகளைப் பெறவும் திட்டமிடப்பட்டது. மருத்துவம் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு அந்த குழுக்களும் நாடுகளும் கணிசமான ஆதரவை வழங்குவதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுகாதாரத்திற்காக பெரிய அளவிலான அந்நியச் செலாவணி எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

இந்த சூழலில், அடுத்த ஆறு மாதங்களில் நம் வாழ்க்கையை சாதாரணமாக வைத்திருக்க 5 பில்லியன் டொலர்கள் தேவை. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இணையாக ரூபாயை பலப்படுத்த வேண்டும். ரூபாயை வலுப்படுத்த இன்னும் 5 பில்லியன் டொலர் தேவை.

அதாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு நாடு வீழ்த்தப்படாமல் மிதக்க வைக்க 6 பில்லியன் டொலர்களை நாம் தேடிக்கொள்ள வேண்டும். இதனை எங்களால் தற்போதைக்கு தேடிக்கொள்ள முடியாது. அதனால் வெளி பிரதேசங்களின் உதவிகை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

இத்தனைக்கும் மத்தியில் சராசரி தேசிய உற்பத்தியை உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் சராசரி தேசிய உற்பத்தி வளர்ச்சி மறை 4.5 ஆக உள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின்படி, நிலைமை இன்னும் மோசமானது. அவர்களின் கருத்துப்படி,அதனுடைய வளர்ச்சி மறை 6.9 வீதமாகும்..உக்ரைன் போரின் தாக்கத்தால் உலக நாடுகளின் சராசரி தேசிய உற்பத்தி அடுத்த ஆண்டு குறையும். 2024 ஆம் ஆண்டில் மீட்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதனால் உலக சூழலையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டு நாம் நடைமுறைப்படுத்திய வரி முறை ஒழிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் 600 முதல் 800 பில்லியன் ரூபா வரையான வருமானத்தை இழந்துள்ளது. அதுதான் நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம். எனவே, நாம் உடனடியாக 2019 வரி முறைக்கு திரும்ப வேண்டும். நாம் விழுந்த இடத்திலிருந்தே கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.

சமீப காலமாக அளவு கணக்கின்றி பணம் அச்சடிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. 2020 முதல் 2022 மே 20ம் திகதி வரை 2.5 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது. எமது வருமான நிலைமை சரிசெய்யப்படும் வரை விருப்பம் இல்லாவி்ட்டாலும் மேலும் ஒரு ரில்லியன் ரூபா விடுவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. நவீன வரலாற்றில் ஒரு பாேதும் இந்தளவு மோசமான நிலைக்கு எமது நாடு முகம்கொடுத்ததில்லை.அதனால் பொருளாதாரத்தை ஊக்குவிக்க நிவாரணம் வழங்க முடியாமல் இருக்கின்றது. கடினமான நிதி முகாமைத்துவத்தை கடைப்பிக்க எமக்கு ஏற்படுகின்றது. குறுகிய காலத்துக்கே இதனை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

தற்போது ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியில் இருந்து எமது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொருளாதார பிரச்சினைக்குஆளாகி இருக்கும் துறைகளை இனம் கண்டு, அவற்றுக்கு கடன் நிவாரண காலத்தை வழங்குவதற்கும் மத்திய வங்கி வேலைத்திட்டம் அமைத்து வருகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை மற்றும் சிறிலங்கன் விமான சேவை மக்கள் வங்கிக்க்கும் இலங்கை வங்கிக்கும் சுமார் ஒரு ரில்லியன் கடன். சிறிலங்கன் விமான நிறுவனத்தை நடத்திச்செல்ல பாரியளவில் மக்கள் பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. அவர்கள் அரசாங்கத்தின் வேறு நிறுவனங்களுக்கு 680 மில்லியன் டொலர் கடன். 2021 மார்ச் 31வரை சிறிலங்கன் விமான நிறுவனத்தின் மொத்த நட்டம் 372 பில்லியன் டொலர். இதனை தொடர்ந்து தாங்கிக்கொள்ள எமது பொருளாதாரத்துக்கு சக்தி இல்லை. அதனால்தான் சிறிலங்கன் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த இருக்கின்றோம். என்றாலும் இந்தளவு கடன் உள்ள நிறுவனத்தை பொறுப்பேற்க வேறு நிறுவனம் முன்வருமா என்பது சந்தேகமாகும்.

பல அரசு நிறுவனங்களில் முறையான நிதி மேலாண்மை இல்லை. எனவே, புதிய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். வீதி அபிவிருத்தி அதிகார சபை அதற்கு ஒரு உதாரணம். அவர்களிடம் நிதி இருந்தாலும், திறைசேரி விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த நிதியை நிர்வகிக்க தவறிவிட்டனர். எமது நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் எந்தவொரு அரச நிறுவனங்களின் நட்டத்தையும் ஈடுகட்ட அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாதுள்ளது. அந்தக் கடன் சுமையை இனி அரசோ அல்லது அரச வங்கிகளோ சுமக்க முடியாது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுடைய எதிர்காலப் பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் விவாதித்தோம். அதன்படி, 2023ம் ஆண்டு அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2923 ஆண்டு இறுதிக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டும். பின்னர் 2024 ஆம் ஆண்டுக்குள் நிதி ஊக்குவிப்பு மூலம் பொருளாதார ஊக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுவோம். 2025 ஆம் ஆண்டிற்குள், நமது வரவு செலவுத் திட்டங்களை சமநிலைப்படுத்துவது அல்லது முதன்மை உபரியை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இந்த நீண்ட கால இலக்கை நோக்கி இந்த பொருளாதார வேலைத்திட்டம் தொடர்ந்து செல்ல வேண்டும். அதிகாரத்தில் உள்ள தனிநபர்கள், குழுக்கள் மற்றும் கட்சிகள் மாறினாலும், நாம் நமது சொந்த இலக்குகளை அடைவதும், மிக உயர்ந்த செயல்திறனைப் பேணுவதும் கட்டாயமாகும்.

இந்த வேலையில் நமது வெளிநாட்டு உறவுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். சர்வதேச ஆதரவை அதிகரிக்க வேண்டும். சில தவறான செயல்களால் உலகில் ஓரங்கட்டப்பட்ட நாடாக மாறி வருகிறோம். அந்த நிலையை மாற்றுவது எளிதல்ல. ஆனால் நாம் அதை எப்படியாவது செய்ய வேண்டும்.

தற்போது வெளிநாட்டு தூதுவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோருடன் நான் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டேன்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்த கடினமான நேரத்தில் நமது நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் இந்த நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பல பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

எதிர்வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் பகிரங்க வேண்டுகோள் விடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவி கோருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், உணவு, விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நான்கு மாத காலத்திற்கு 48 மில்லியன் டாெலர்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

எமக்கு கடனும் உதவியும் வழங்கும் நாடுகள் வரிசைநில் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. எப்பொழுதும் எமக்கு விசுவாசமாக இருந்த இந்நாடுகளுடனான உறவுகள் தற்போது முறிந்துள்ளன. அந்த உறவுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

சில காலத்திற்கு முன்பு நாங்கள் சீன மக்கள் குடியரசில் (SWAP) ஸ்வப் வசதியின் கீழ் கடன் வாங்கினோம். அந்த கடன் தொடர்பாக ஒரு நிபந்தனை இருந்தது. நம் நாட்டில் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் மட்டுமே அந்த பணத்தை நாம் பயன்படுத்த முடியும். கடன் பெற்ற மூன்று மாதங்களாக எங்களிடம் அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லை. அப்போது எமது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாட்டை ஏமாற்றுவதற்காக கடன் பெற்றுக் கொண்டனர். அந்த நிபந்தனையின் கீழ் எங்களுக்கு கடன் விடுவிக்கப்படாது. எண்கள் மட்டும். அந்த நிபந்தனையை நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஜப்பான் நமது நீண்ட கால நண்பர். நம் நாட்டிற்கு பெரிதும் உதவிய நட்பு நாடு. ஆனால் கடந்த காலங்களில் நடந்த துரதிஷ்டமான சம்பவங்களால் அவர்கள் இப்போது நல்லஎண்ணத்தில் இல்லை. சில திட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து நமது நாடு ஜப்பானுக்கு முறையாக அறிவிக்கவில்லை. சில சமயங்களில் காரணமும் கூறப்படவில்லை. தனிநபர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி ஜப்பான் நம் நாட்டில் மேற்கொண்ட சில திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானும் இந்தியாவும் எங்களுக்கு இரண்டு எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை வழங்க ஒப்புக்கொண்டன. எந்தவொரு நியாயமான காரணமும் அடிப்படையும் இல்லாமல் அந்த இரண்டு திட்டங்களையும் மின்சார சபை நிறுத்தியது.

2019 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 பில்லியன் டாெலர் மதிப்பிலான திட்டங்களை நமது நாட்டிற்கு வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் எந்த காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

அடிப்படையற்ற காரணங்களுக்காக நட்பு நாடுகளால் எமக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க திட்டங்களை இடைநிறுத்துவது குறித்து விசாரணை நடத்துமாறு பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவை நான் வலியுறுத்துகிறேன்.

நட்பு நாடுகளை அந்நியப்படுத்திய பின்னணியிலும் எங்களுக்கு உதவ இந்தியா முன்வந்தது. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு எங்கள் மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜப்பானுடன் பழைய நட்புறவை மீண்டும் ஏற்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு கடன் வழங்கும் நட்பு நாடுகளை ஒன்றிணைக்க உதவி மாநாட்டை நடத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுத்தோம். இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது நம் நாட்டுக்கு பெரும் பலம். சீனாவும் ஜப்பானும் வெவ்வேறு கடன் அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. இவ்வாறான ஒரு மாநாட்டின் மூலம் கடன் வழங்கும் அணுகுமுறைகளில் சில உடன்பாடுகளை எட்ட முடியும் என்பது எங்கள் நம்பிக்கை.

இதுவரை வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பலதரப்பு இறக்குமதியாளர்களிடமிருந்து பெறப்பட்ட பல கடன் தவணைகளை இந்த மாதம் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் தவணைகளை நாங்கள் விட்டுச்செல்வதில்லை. எதிர்காலத்தில் நாங்கள் புதிய கடன்களை எடுக்க வேண்டியிருக்கும், அந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

பிற நாடுகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்தவுடன், நம் நாடு பெற்றுள்ள தனிநபர் கடன்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான லோஸாட் மற்றும் சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனமான Clifford Chance ஆகியோரிடம் இருந்து நிபுணர் ஆலோசனையைப் பெறுவோம்.

பெற்ற கடனை அடைக்க அந்நிய செலாவணி இருக்க வேண்டும். அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரைவாகப் பலப்படுத்த வேண்டும். நமது நாடு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அந்த இடம் ஒரு போட்டி நிலைக்கு வருவதற்கு ஒரு நல்ல காரணியாகும். சிங்கப்பூர், துபாய் ஆகிய பொருளாதார மையங்களுக்கு மத்தியில், மற்றொரு பொருளாதார மையமாக நாம் வளர வாய்ப்பு உள்ளது.நமது பயணத்தை திட்டமிடுவதற்கு வியட்நாம் சிறந்த உதாரணம். வெவ்வேறு தயாரிப்பு மதிப்புகள் ஒருங்கிணைப்பு மூலம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அதே சமயம், பல்வேறு நாடுகளுடனான நமது பரிவர்த்தனைகளில் வர்த்தக உபரி சமநிலையை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க விரும்புகிறோம்.

இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இறுதி இலக்கு. 4ஆவது நூற்றாண்டு சுதந்திர விழாவை நடத்தும் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்காகும்.

எமது நாடு செயலிழந்த கணினி போன்றது செயற்படுவதில்லை. முதலில் நாம் என்ன செய்ய வேண்டும். இந்த கணினியை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இடைக்கால வரவு செலவு திட்டம் மூலம் கணினியை மீட்டமைப்பதாகும். அதன் பின்னர் அதற்கு நவீன வெயலணியொன்றை ஏற்படுத்தலாம்., எந்த வைரஸும் உள்ளே நுழையாத, வைரஸ் கார்டையும் நிறுவலாம். ஆனால் அதையெல்லாம் செய்ய, கணினியை மறுதொடக்கம் செய்து மீட்டமைக்க வேண்டும்.

எனவேதான் எங்களுடைய எதிர்கால பொருளாதாரத் திட்டம் மற்றும் வழிகாட்டல் வரைபடத்தின் அடிப்படையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். நான் முன்பே குறிப்பிட்டது போல், இந்த வரவு செலவுத் திட்டம் நமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், மீட்சி பெறுவதற்கும் அடித்தளம் அமைக்கும் என்பது எங்களின் நம்பிக்கை.

இடைக்கால வரவு செலவு திட்டம் அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும். மற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். ஏற்றுமதி பொருளாதாரம், சுற்றுலா கட்டுமானம் போன்ற பல துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசர தேவை உள்ளது.

எமது நாட்டில் பொருளாதார ரீதியில் வலுவடையாத நலிந்த பிரிவினர் மீது இம்முறை கவனம் செலுத்த வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அவர்கள் ஒப்புக்கொண்டனர். அந்த உண்மைகளின் அடிப்படையில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். அங்கு நாங்கள் எதிர்பார்க்கும் சில முக்கிய பகுதிகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

உணவுக்கு வசதி இல்லாதவர்களுக்கு இலவச உணவு

உலக உணவுத் திட்டத்தின் (WFP) சமீபத்திய ஆய்வில், இலங்கை குடும்பங்களில் நூற்றுக்கு 70 வீதம் வரை தங்களின் உணவையும் உணவு வேளையையும் குறைத்துக்கொள்வதாகக் கண்டறிந்துள்ளது. அந்த நிலையை மாற்றி, இந்த உணவுப் பாதுகாப்பு செயல்திட்டத்தின்படி உணவு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க பாடுபடுவோம். மூன்று வேளையும் சாப்பிடும் நிலையை நாட்டில் உருவாக்கி வருகிறோம். அதற்காக (நேற்று) நேற்று முன்தினம் அமைச்சரவையில் உணவுக்கு வசதி இல்லாதவர்கள் அனைவருக்கம் இலவசமாக உணவு பெற்றுக்கொடுக்க நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். ஒவ்வொருவரும் 3வேளை சாப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். அதற்காகன வேலைத்திட்டம் அமைக்கப்படுகின்றது. இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க முன்வரவேண்டும்.

மானிய கொடுப்பனவு அதிகரிப்பு

பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கும் வேளையில், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இயன்றவரை அவர்களின் துன்பத்தைப் போக்க நடவடிக்கை எடுப்போம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்காக தற்போது செலவிடப்படும் வருடாந்த செலவு 700மில்லியன் டொலர் ஆகும். இந்தத் தொகை 850 மில்லியன் டொலர்வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. முடியுமானால் 900மில்லியன் டொலர்வரை அதிக எதிர்பார்க்கின்றோம்.

விவசாயிகளின் கடன்கள் நூறுவீதம் தள்ளுபடி

சிறு நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும் அவலநிலையில் இருப்பதை நாம் அறிவோம். இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள நெற் பயிர் செய்கையாளர்களிடம் பெற்ற விவசாய கடன்கள் உடனடியாக நிறுத்தப்படும். இவர்களுக்கு கடன் செலுத்தவும் விவசயம் செய்யவும் முடியாது.

மக்களுக்கு அவர்களின் காணிகளில் உரித்துரிமை காணி உறுதிப்பத்திரம்

முன்னதாக ஸ்வர்ணபூமி, மகாவலி போன்ற உறுதிப்பத்திரங்கள் மூலம் அரச காணிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். சில மாகாண சபைகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் வெற்றிகமாக முடிக்க முடியவில்லை. தற்போது அவ்வாறான எதிர்ப்புகள் எழாத வகையில் மக்களுக்கு காணி உரித்துரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பையும் கேட்கின்றேன்.

நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்கப்படும்

புறநகர் குடியிருப்புகள் பலவற்றில் வாடகைக்கு குடும்பங்கள் வாழ்கின்றன. வீட்டு உரிமைக்கு நீண்ட கால வாடகை செலுத்துபவர்களும் உண்டு. இந்த அனைத்து வீடுகளின் உரிமையையும் குடியிருப்பாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

சீனாவால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பொருத்தமானவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்

நான் முன்பு பிரதமராக இருந்தபோது சீன மக்கள் குடியரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் நம் நாட்டிற்கு 1888 குடியிருப்புகளை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். இதில் 108 வீடுகளை கலைஞர்களுக்காக ஒதுக்கியுள்ளோம். இந்த வீடுகள் அனைத்தையும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம். அந்த 1888 வீடுகளையும் இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை அமைப்பதே எனது எதிர்பார்ப்பு. அதற்கான பிரதேசங்கள் தற்போது பெயரிடப்பட்டு வருகின்றது. கட்சி பேதமில்லாமல் அனைவரும் இணைந்து, பொருத்தமானவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்போம். இதுவரை காலமும் மகவளி, வீடமைப்பு அதிகாரசபை மற்றும் வேறு பிரிவினர்களிடம் இருந்த இலட்சக்கணக்கான விட்டு உரிமைகளை, முதல் தடவையாக மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். பிரட்சிகரமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது.

நாடு வீழ்ச்சியடைந்துள்ள இந்த வேளையில், மக்கள் மீது அதிக அழுத்தத்தை கொடுக்காமல் பொருளாதாரத்தையும் நாட்டையும் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். ஒவ்வொரு துறையை விசாரித்து, ஒவ்வொரு துறையையும் பாதுகாத்து முன்னேற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. நாம் படிப்படியாக முன்னேறினால் நாட்டை காப்பாற்ற முடியும். தனிப்பட்ட பிரச்சினை அல்லது கட்சிப் பிரச்சினை என்பதைத் தாண்டிய ஆபத்தான நிலை இங்கு உள்ளது. இதன் ஆபத்தையும் தீவிரத்தையும் புரிந்துகொள்வோம். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், கடந்த காலத்தைத் தேடுவதில் அர்த்தமில்லை. சிறிது காலத்திற்காவது நாம் கடந்த காலத்தை மறந்து விடுகிறோம். நாட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில், எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்போம்.

ஒரு நாட்டை மீண்டும் உயர்த்த பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டும் போதாது. அதே நேரத்தில், சமூக-அரசியல் மற்றும் பொது சேவை சீர்திருத்தங்கள் தேவை. அண்மையில் போராட்டக்களத்தில் இருந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட ஒரு விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கலைஞர் தமிதா அபேரத்ன இந்தக் கோரிக்கையை என்னிடம் முன்வைத்தார். இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றத்தில் தீர்வு காண வேண்டும் எனவும் நாட்டை நேசிப்பவர்களை ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், பிரதமர் அவர்களே, டோஃபி லாசிங்கர் கொடுத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள் என்றார்.

இந்த யோசனைக்கு உங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறேன். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணும் பொறுப்பு இந்த சபையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் தோள்களில் உள்ளது. அந்தப் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். டொபி, லொசிந்தர் தீர்வுகளுக்கு பதிலாக, நீண்ட கால மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாட வேண்டும்.

எனவே, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டுக்காக புதிதாக சிந்திப்போம். புதிய பயணத்தைத் தொடங்குவோம். தேவையான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை தொடங்குவோம். வித்தியாசமாக சிந்திப்போம். நாம் அனைவரும் வித்தியாசமாக சிந்தித்து வித்தியாசமாக செயல்படுவதன் மூலம் அமைப்பை மாற்ற ஆரம்பிக்கலாம்.

அரச சேவையை மறுசீரமைப்பு

பொதுச் சேவையையும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். அரச சேவையில் வரம்பற்ற வேலைவாய்ப்பை வழங்குவதன் காரணமாக செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. சில அரசு ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய கடமை இல்லை. எனவே, பொதுப்பணித்துறை முழுமையாக சீரமைக்கப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். எங்கள் நோக்கம் ஒரு குடிமகன் அவர்களின் வாழ்நாள் முழுவதும் உடனடி மற்றும் திறமையான சேவைகளை தொந்தரவு இல்லாமல் பெற உதவும் ஒரு பொதுச் சேவையை உருவாக்குவதாகும். அதற்காக அரச சேவையை நூறுவீதம் மறுசீரமைப்பு செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் மற்றும் மோசடி இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவோம்

இந்த மாற்றத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் மற்றும் மோசடி இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவது. அது கட்டாயம். திருட்டு இல்லாத சமுதாயம். திருடர்களுக்கு இடமில்லாத நாடு. திருடர்களைத் தண்டிக்கக் கூடிய வலுவான விதிகளைக் கொண்ட ஆட்சி.

இதற்காக, இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பது தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். 2019 இல், லஞ்சம் மற்றும் ஊழலை ஒடுக்குவதற்கான தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. அந்த கொள்கை வரைவை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களிடமும் கையளிக்க நடவடிக்கை எடுப்போம். அவர்களின் கருத்தையும் பெறுவோம். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பொறிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் ஸ்வீடன் போன்ற நாடுகள், ஹாெங்காங் அரசாங்கத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேவையான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வோம். தற்போதைய வரைவில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்றால் அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

எனவே நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் உங்களது பொருளாதார, சமூக-அரசியல் மற்றும் பொதுச் சேவை சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் இந்த சபையில் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். முதலில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம் நாட்டை காப்போம். அதற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, உங்கள் பாரம்பரிய அரசியல் நடவடிக்கைகளுக்குத் திரும்புங்கள். பாரம்பரிய கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துங்கள்.

வின்சென்ட் சர்ச்சில் ஒருமுறை கூறிய மேற்கோளை மேற்கோள் காட்டி எனது கருத்தை முடிக்க விரும்புகிறேன்.

“அவநம்பிக்கையாளர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிரமத்தைப் பார்க்கிறார் ; நம்பிக்கையாளர் ஒவ்வொரு சிரமத்திலும் வாய்ப்பைப் பார்க்கிறார்”

இக்கட்டான நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நம்பிக்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் முழு மனதுடன் செயற்படுவோம் என்றார்.

Previous Post

வாரத்திற்கு 4 நாட்கள் வேலைத் திட்டம் பிரித்தானியாவில் அமுல்

Next Post

எனது புண்ணியத்தாலேயே ரணில் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்

Next Post
புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய் | புலிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

எனது புண்ணியத்தாலேயே ரணில் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures