எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தாங்கள் வெற்றிபெறுவது உறுதி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சியில் 10 வருடகாலம் எரிபொருட்களின் விலைகளை ஏன் குறைக்க முடியாதிருந்தது? மக்களின் பணம் ஏன் சுரண்டப்பட்டது?
அதுமாத்திரமல்லாது அந்த காலப்பகுதியில் பால்மாவின் விலை எவ்வாறிருந்தது? இன்று எவ்வாறுள்ளது என்று தான் கேள்வி எழுப்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஏன் தங்களால் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாமல் போனது என்பதை மொட்டு சின்னத்தின் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலும் மக்கள் தங்களது வாக்களிப்பை தீர்மானிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

