முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது. 6.5 அடி உயரமும் 3அடி அகலமும் கொண்ட பாரிய நினைவுக்கல் காணாமல் ஆக்கபட்டுள்ளது . இந்த பிரதேசம் நேற்று இரவு முழுவதும் இராணுவத்தின் தடை பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் உள்நுழைய அனுமதிக்கபடவில்லை .
நேற்று (12)மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது . இந்த நிலையில் காவற்துறை இராணுவம் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் இராணுவ தடை ஏற்படுத்தப்பட்டு உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .
நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றி செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.